நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு ஆசிய அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் மட்டும்தான். இந்த உலகக்கோப்பைக்கு முன்புவரை ஒரேயொரு உலகக்கோப்பை போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி, தற்போது 7 போட்டிகளில் 4-ல் வெற்றியை பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் பதட்டமில்லாமல் செயல்படும் ஆப்கானிஸ்தான் அணி, சமீப காலத்தில் அதிக முன்னேற்றம் கண்ட அணியாக மிளிர்ந்துவருகிறது.
நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளோடு இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன்ஸ் டிரோபி தொடருக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
எதிர்வரும் 2025 சாம்பியன்ஸ் டிரோபியை பாகிஸ்தான் எடுத்து நடத்தவிருப்பதால், ஹோஸ்ட் செய்யும் அந்த அணியோடு உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடத்தை பிடிக்கும் அணிகள் சேர்ந்து 8 அணிகள் மட்டுமே தொடருக்கு தகுதிபெறும். தற்போது 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளோடு 5வது இடத்தில் நீடிக்கும் ஆப்கானிஸ்தான் அணி, இதற்கு பிறகான 2 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் கூட 8வது இடத்திற்கு கீழ் செல்லாது.
இந்நிலையில்தான் சாம்பியன்ஸ் டிரோபிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, வரலாற்றில் முதல்முறையாக முன்னேறி அசத்தியுள்ளது. சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்போடு இருக்கும் நிலையில், இந்த செய்தி அந்த அணிக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும்.
நடப்பு உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமெ வெற்றிபெற்று கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, 2025 சாம்பியன்ஸ் டிரோபிக்கு தகுதிபெற வேண்டுமானால் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும். ஒருவேளை தோல்வியை தழுவினால் உலக சாம்பியனாக இருக்கும் ஒரு அணி சாம்பியன்ஸ் டிரோபியில் பங்கேற்காமல் போன மோசமான வரலாற்றை இங்கிலாந்து படைக்கும்.
இதுவரை இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிரோபி தொடருக்கு தகுதிபெற்றுள்ளன.