கடந்த மாதம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது ஆப்கானிஸ்தான். மிகச் சிறப்பாக விளையாடி அதுவரை வந்த அந்த அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் 56 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் அசத்தினாலும் பேட்டிங்கில் அந்த அணி வீரர்கள் அதிகம் பேர் சோபிக்கவில்லை. தொடர்ந்து பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருந்தாலும், அந்த அணியின் பேட்டிங் முக்கியமான கட்டங்களில் சுமாராக செயல்படவே தடுமாறியிருக்கிறது. அதனால், பேட்டிங்கில் கவனம் செலுத்துவதே தன்னுடைய அடுத்த வேலை என்று சொல்லியிருக்கிறார் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட்.
"அந்த அரையிறுதி போட்டிக்கு நாங்கள் மிகப் பெரிய நம்பிக்கையோடு வந்தோம். பலமான தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடும்போது எங்களால் ஒரு நல்ல சவால் கொடுக்க முடியும் என்று எண்ணத்தோடு தான் மைதானத்துக்குள் நுழைந்தோம். ஆனால் எங்களால் நல்லதொரு சவாலை கொடுக்க முடியவில்லை. அது எனக்கு மிகுந்த ஏமாற்றம் தருகிறது. ஆனால் என் வீரர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.
இந்த ஒரு செயல்பாடு நாங்கள் எப்படி இந்தத் தொடரில் ஆடியிருக்கிறோம் என்று சொல்லிவிடாது. அதேசமயம் இது நாங்கள் எந்த விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும், என்னென்ன முன்னேற்றங்கள் காணவேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து சீராக மற்ற அணிகளுக்கு சவால் தரவேண்டும் என்றால் பேட்டிங்கில் எங்களுக்கு ஆட்டத்தை வென்றுகொடுக்கக்கூடியவர்களைக் கண்டறியவேண்டும். குறிப்பாக நாங்கள் போட்டிகளை சேஸ் செய்யும்போது அப்படியான வீரர்கள் வேண்டும்" என்று கூறியிருக்கிறார் டிராட்.
இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஓப்பனர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் இருவருமே நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவருமே 200+ ரன்கள் எடுத்தனர். குர்பாஸ் இந்த உலகக் கோப்பையின் டாப் ரன் ஸ்கோரராக விளங்கினார். ஆனால் அவர்களின் மிடில் ஆர்டர் ஒட்டுமொத்தமாக சொதப்பியது. யாராலும் சூழ்நிலைக்கு ஏற்ப நிலைத்து நின்று முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதுதான் தங்கள் பேட்டிங் தனக்கு மிகப் பெரிய வருத்தம் தருவதாக டிராட் கூறியியிருப்பதற்குக் காரணம்.
மேலும் பேசிய டிராட், "தென்னாப்பிரிக்க அணி எங்களை முழுமையாக காலி செய்துவிட்டது என்பதுதான் உண்மை. இருந்தாலும் எங்கள் வீரர்கள் இந்த அனுபவத்திலிருந்து நிச்சயம் நிறைய கற்றுக்கொள்வார்கள். கடந்த நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை விட நாங்கள் ஒரு படி முன்னால் வந்திருக்கிறோம். முன்னேற்றம் என்பது படிப்படியாக அடைவது தான். நிச்சயம் நாங்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன்.
முக்கியமாக எங்கள் பேட்ஸ்மேன்கள், இதுபோன்ற கடினமான ஒரு பிட்சில் தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு உலகத்தர பௌலிங் அட்டாக்கை இப்படியொரு பெரிய அரங்கில் எப்படி கையாள்வது என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். வெற்றி பெறுவதற்கான பல வழிகளை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். இந்தப் போட்டியில் அதை எங்களால் கண்டறிய முடியவில்லை. அவ்வளவுதான்" என்று கூறினார் டிராட்.
அரையிறுதி வரை வந்து ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்திருக்கும் நிலையில், அந்த சாதனை பற்றி பெருமை கொள்வாரா என்று டிராட்டிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "ஒருவேளை இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த எமோஷன்கள் எல்லா எமோஷன்களும் மறைந்துவிட்டால் ஒருவேளை நான் அதைப்பற்றி சிந்திக்கலாம்.
ஒரு உலகக் கோப்பையின், இதுபோன்ற ஒரு தருணத்தின் அங்கமாக இருந்துவிட்டு, கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கும் மேல் அப்படியொரு இரவுக்காக தயாராகிவிட்டு இப்படியொரு முடிவை மறப்பது என்பது கண்டிப்பாக எளிதான விஷயம் அல்ல. இருந்தாலும், இப்படியொரு ஆட்டம் எங்களை இந்த இடம் வரை அழைத்து வந்த சிலபல நல்ல போட்டிகளை மறந்துவிடக்கூடாது. அதேசமயம் பேட்டிங் மூலம் போட்டிகளை வெற்றி பெறும் வழியையும் கண்டறிந்தால் நன்றாக இருக்கும். அதுதான் நாளை முதல் நான் செய்யப்போகும் வேலை" என்று கூறினார் டிராட்.
டிராட் கூறுவது போல் பேட்டிங்கில் ரஷீத், நூர் போன்ற மேட்ச்வின்னர்களை ஆப்கானிஸ்தான் அணி கண்டறிந்தால் நிச்சயம் அவர்களால் இன்னும் ஒரு படி மேலே செல்ல முடியும்.