போட்டி 34: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து
மைதானம்: பாரத் ரத்னா ஶ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியம், லக்னோ
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 3, மதியம் 2 மணி
போட்டிகள்: 6, வெற்றிகள் - 3, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 6
புள்ளிப் பட்டியலில் இடம்: ஆறாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ஹஷ்மதுல்லா ஷாஹிதி - 226 ரன்கள்
சிறந்த பௌலர்: ரஷீத் கான் - 7 விக்கெட்டுகள்
வங்கதேசம், இந்தியா அணிகளிடம் அடுத்தடுத்து தோற்று உலகக் கோப்பையை தொடங்கிய ஆப்கானிஸ்தான், மூன்றாவது போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியது. அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது அந்த அணி. ஆனால், சிறப்பாக கம்பேக் கொடுத்து பாகிஸ்தானையும், இலங்கையையும் கடைசி இரு போட்டிகளில் தோற்கடித்திருக்கிறது. இந்த இரு போட்டிகளிலுமே சேஸ் செய்தே வென்றிருக்கிறது ஆப்கானிஸ்தான்.
போட்டிகள் - 6, வெற்றிகள் - 2, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: ஏழாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ஸ்காட் எட்வர்ட்ஸ் - 204 ரன்கள்
சிறந்த பௌலர்: பாஸ் டி லீட் - 10 விக்கெட்டுகள்
தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்து இந்த உலகக் கோப்பையின் மிகப் பெரிய அப்செட்டை அரங்கேற்றிய நெதர்லாந்து அணி, அதே வேகத்தோடு மற்ற போட்டிகளில் ஆடவில்லை. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்தது அந்த அணி. இருந்தாலும் கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இன்னும் அரையிறுதி ரேஸில் நீடித்துக்கொண்டிருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இதுவரை 4 போட்டிகள் லக்னோவில் நடந்திருக்கின்றன. முதலில் பேட்டிங் செய்த அணி 2 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 2 போட்டிகளிலும் வென்றிருக்கிறது. மற்ற போட்டிகள் பேட்டிங், பௌலிங் இரண்டுக்கும் ஓரளவு கைகொடுத்திருந்தாலும், கடைசி போட்டியில் பெரிய அளவு ரன் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய அந்தப் போட்டியில் மொத்தமே 358 ரன்கள் தான் எடுக்கப்பட்டது. இந்தப் போட்டி நடக்கும் ஆடுகளம் செம்மண் மற்றும் களிமண் கலந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்கும்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு இது மிகச் சிறந்த உலகக் கோப்பையாக மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த 2 போட்டிகளில் அந்த அணி சேஸிங் செய்து வென்றிருப்பது, பெரும் முன்னேற்றம் கண்டிருக்கும் அந்த அணியின் மனநிலையைக் காட்டுகிறது. இத்தொடரின் தொடக்கத்தில் ஓப்பனர்கள் இப்ராஹிம் ஜத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரை மட்டுமே நம்பியிருந்தது அந்த அணி. ஆனால், கடந்த இரு போட்டிகளில் ரஹ்மத் ஷா, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி ஆகியோர் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி அந்த அணியை வெற்றி பெற வைத்தனர். சொல்லப்போனால் அந்த அணியின் பந்துவீச்சை விட இப்போது பேட்டிங் நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
ரஷீத் கான், முகமது நபி ஆகியோர் உள்பட அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் இன்னும் தங்கள் முழுமையான திறனைக் காட்டவில்லை. இருந்தாலும் போட்டிக்கு ஒருவராவது நல்ல பங்களிப்பைக் கொடுக்கிறார்கள். அதோடு ஆப்கானிஸ்தான் அணி எடுக்கும் முடிவுகளும் அவர்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற அணி என்பதைக் காட்டுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக நூர் அஹமதை தேர்வு செய்து கூடுதல் ஸ்பின்னரோடு களமிறங்கினார்கள். அவர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தபோதும், கடந்த போட்டியில் அவரை நீக்கி ஃபசல்ஹக் ஃபரூக்கியை மீண்டும் கொண்டுவந்தார்கள். அவர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார். அணியில் எல்லோருமே ஓரளவு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு அணியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் நிச்சயம் நெதர்லாந்துக்கு அந்த அணி பெரும் சவாலாக இருக்கும். லக்னோ ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிந்தால், நூர் அஹமது மீண்டும் களமிறக்கப்படலாம்.
நெதர்லாந்து அணி இன்னும் அரையிறுதி ரேஸில் இருக்கிறது. அவர்கள் தகுதி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றாலும், குறைந்தபட்சம் டாப் 8 இடங்களுக்குள் முடித்து 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற அந்த அணிக்கு வெற்றிகள் அவசியம். அந்த அணி தங்கள் கடைசி 2 போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை சந்திக்கவேண்டும். அதனால் இதுதான் அவர்களின் சிறந்த வாய்ப்பு.
அவர்களின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பையில் சற்றும் பயன் தராத ஒன்று என சொல்லலாம். ஆனால் அவர்களின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பவர்பிளே பௌலர்கள் அந்த அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுக்கிறார்கள். இந்தப் போட்டியிலும் அவர்கள் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுக்கும்பட்சத்தில் ஆப்கானிஸ்தானுக்கு சவால் கொடுக்கலாம்.
ஆப்கானிஸ்தான் - முஜீப் உர் ரஹ்மான்: தடுமாறும் டாப் ஆர்டர் கொண்டிருக்கும் ஒரு அணிக்கு எதிராக, லக்னோ போன்ற ஆடுகளத்தில் தலைசிறந்த பவர்பிளே ஸ்பின்னர் ஒருவர் ஆடுகிறார் என்றால் அங்கு நிச்சயம் விக்கெட் வேட்டை நடக்கும்.
நெதர்லாந்து - ஆர்யன் தத்: ஆப்கானிஸ்தான் அணியின் பலம் வாய்ந்த டாப் ஆர்டரை தன் ஸ்பின்னால் ஆர்யன் தத் நிலைகுலையச் செய்யலாம். அந்த இடத்திலேயே அவர் ஆப்கானிஸ்தானை சிக்கலில் தள்ளலாம்.