உலகக்கோப்பை தொடங்கி அனைத்து அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒரு போட்டியில் கூட பெறாமல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் நீடிக்கின்றனர். இந்நிலையில், இவ்விரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் லக்னோ மைதானத்தில் மோதிவருகின்றன.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் ஷனகா மற்றும் குசால் பெரேரா இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்துகொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 125 ரன்களை குவித்த இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தியது. ஆனால் என்ன தான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ளாத இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 177 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு பின்பு தொடங்கப்பட்டது.
அடுத்து களத்திற்கு வந்த இலங்கை அணி ஓரளவுக்கு ரன்களை எடுத்துவரும் என்று நினைத்தால், 209 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆடம் ஷாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 210 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 28 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. வெற்றிக்கும் இன்னும் 53 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளதால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
போட்டியின் போது மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் போட்டி பகுதிநேரம் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில், மைதானத்தில் மேற்கூரையில் ஸ்டாண்டோடு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டு பெயர்ந்து விழுந்தது. யாரும் எதிர்ப்பார்க்காத போது விழுந்ததால் ரசிகர்கள் எந்த சேதாரமும் இன்றி ஓட்டம் பிடித்தனர். போட்டியில் கூட்டம் குறைவாக இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பரபரப்பான வீடியோ காட்சியை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.