இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகத் தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று தொடக்க வீரர் சுப்மன் கில், சி.எஸ்.கே. வீரர் ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத், இசான் கிஷன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய முகேஷ் குமார், ஜெயதேவ் உனாட்கட், நவதீப் ஷைனி ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து விளையாடி வரும் முகமது ஷமிக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று ஹனுமா விகாரி, சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் சிலர் நீண்ட நாட்களாக இந்திய அணியின் தேர்வுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு பதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, சர்ஃபராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோரை இந்திய அணிக்காக தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அவர்களில் ஒருவர் கூட அணியில் இடம்பெறாதது அபினவ் முகுந்த் மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் விரக்தியடைந்த அபினவ் முகுந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்துள்ளதை புரிந்துகொள்ள முடியவில்லை. இனி ஒரு இளம் வீரர் தனது மாநில அணிக்காக ஆடுவதினால் பெருமை கொள்வதற்கு எந்த ஊக்கமும் அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் விரைவாக இடம்பிடிக்க இனி பிரான்சைஸ் கிரிக்கெட் தான் புதிய வழியாக அமைந்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.