2007 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணியில், கடைசி ஓவரை வீசி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றவர் ஜொகிந்தர் ஷர்மா. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர் ஹரியானா துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஹிசார் பகுதியைச்சேர்ந்த பவன் என்ற இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜொகிந்தர் ஷர்மா உட்பட மொத்தம் ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, ஹரியானா மாநிலம் ஹிசார் குடியிருப்புப்பகுதியை சேர்ந்த பவன் என்ற 27 வயது இளைஞர், கடந்த ஜனவரி 1ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜொகிந்தர் ஷர்மா உட்பட மொத்தம் 6 பேர் தனது மகனைத் துன்புறுத்தியதாகவும், அதுவே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாகவும் பவனின் தாயார் சுனிதா, ஜனவரி 2ம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் தன் மகன் மீது சொத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுனிதா தெரிவித்திருக்கிறார்.
அஜய்வீர், ஈஸ்வர் பிரேம், ராஜேந்திர சிஹாக் ஆகியோர் உட்பட மொத்தம் 5 பேரும் பவன் என்ற இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக, ஹரியானா காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆரில் பெயரிடப்பட்டுள்ளனர். உடன் ஜொகிந்தர் ஷர்மா மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பவன் உடலை வாங்கமறுத்த தாயார் மற்றும் உறவினர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களை SC/ST வன்கொடுமை சட்டத்தீன் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். மேலும் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல், வழக்கின் நியாயமான விசாரணை உள்ளிட்ட 6 கோரிக்கைகளையும் காவல்துறையினரிடம் முன் வைத்தனர்.
காவல்துறையினர் தரப்பில், தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணைக்கு பிறகே எஸ்சி/எஸ்டி பிரிவு சேர்க்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளனர்.
இதற்கிடையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜொகிந்தர் ஷர்மா, இந்த வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இந்த வழக்கைப் பற்றியும், பவனை பற்றியும் எனக்குத் தெரியாது. அவரை ஒருபோதும் நான் சந்தித்ததில்லை" என்று கூறியுள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.