இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகத் தொடர்கிறார். துணை கேப்டனாக அஜிங்க்ய ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சர்ஃபராஸ் கான் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சர்ஃபராஸ் கானை அணியில் எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ''அணியில் இடம்பிடிக்க சர்ஃபராஸ் கான் இன்னும் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? கடந்த 3 ஆண்டுகளில் அவரது ரிக்கார்டை பார்த்தால், அவர் மற்றவர்களை விட டாப்பில் இருக்கிறார். அவர் எல்லா இடங்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். இப்போதும்கூட அவர் தேர்வாகவில்லை என்றால் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
சர்ஃபராஸ் கானை அணியில் எடுக்காததற்கான காரணம் குறித்து உங்களுக்கும் (பிசிசிஐ) எனக்கும் தெரியாத வேறு ஏதாவது காரணம் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லுங்கள். சர்ஃபராஸ் கானை பற்றிய குறிப்பிட்ட விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையாவது வெளிப்படையாக கூறுங்கள். ஆனால் அப்படி ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை. அதை யாராவது சர்ஃபராஸ் கானிடம் சொன்னார்களா என்பதும் தெரியவில்லை'' என்று சோப்ரா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.