கவுதம் கம்பீர் எப்படி தன்னுடைய கிரிக்கெட்டுக்காகவும், தன்னுடைய அணிக்காகவும் அர்ப்பணிப்புமிக்க வீரராக பார்க்கப்படுகிறாரே, அதேஅளவு அவருடைய முன்கோபத்திற்காகவும் அதிகப்படியாக பார்க்கப்படுகிறார். களத்தில் எதிரணி வீரர்களுடன் அவருடைய மோதல்கள் எல்லாம் தீயாகவே இருக்கும், “சிரிக்கவே மாட்டாரா இவர்” என்பதுபோலான முகபாவனையுடனே இருக்கும் கம்பீர், ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு எதிராக மிகப்பெரிய ஹீட் வாக்குவாதத்தை நிகழ்த்தி, அதற்காக அபராதமும் விதிக்கப்பட்டார்.
எப்போதும் ஷார்ட் டெம்பர் கேரக்டர், முன்கோபி, இறுக்கமானவர் என்று கருதப்படும் கம்பீரின் கோவம் எந்தளவு இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தியுள்ளார்.
கவுதம் கம்பீர் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லிக்காக விளையாடிய போது, ஆகாஷ் சோப்ரா, ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் வீரேந்திர சேவாக் போன்றவர்களுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா யூடியூபர் ராஜ் ஷமானியுடனான போட்காஸ்டில் சமீபத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவரிடம் கவுதம் கம்பீர் உடனான நட்பு குறித்து கேட்கப்பட்டதற்கு, அவருக்கும் எனக்கும் நட்பு பெரியதாக இருந்ததில்லை என்று வெளிப்படுத்தினார்.
கவுதம் கம்பீர் குறித்து பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “நாங்கள் ஒருபோதும் நண்பர்களாக இருக்கவில்லை, ஆனால் போட்டியாளர்களாக இருந்திருக்கிறோம். ஏனெனில் நாங்கள் இருவரும் ஓப்பனிங் ஸ்லாட்டிற்காக போராடினோம். அவருக்கு ஆரம்பம் முதலே விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இருப்பினும், அவர் ஒரு ஷார்ட் டெம்பராகவே எப்போதும் இருப்பார்.
அவருக்கு கோபத்தின் மீது கட்டுப்பாடு என்பதே இருந்தது இல்லை. ஒருமுறை டிரக் டிரைவர் ஒருவர் அவருடைய வாகனத்தை முந்திச்சென்றதால், அவருடைய காரிலிருந்து இறங்கிச்சென்று, டிரக்கின் மீது ஏறி டிரைவரின் காலரைப் பிடித்து சண்டைக்கு சென்றதாக என்னிடம் கூறினார். கம்பீர் எப்போதும் அப்படித்தான்” என்று கூறியுள்ளார்.
கம்பீர் 58 டெஸ்ட்டில் 41 சராசரியுடன் 4154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் 40 சராசரியுடன் 5238 ரன்களும், டி20 போட்டிகளில் 6402 ரன்களும் அடித்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 43 சதங்கள், 68 அரைசதங்களுடன் 15153 ரன்களும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 21 சதங்கள், 60 அரைசதங்களுடன் 10077 ரன்களும் கவுதம் கம்பீர் குவித்துள்ளார்.