வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6வது சதமடித்த ரிஷப் பண்ட், இந்தியாவிற்காக குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்டராக மாறி சாதனை படைத்தார்.
இந்தப்பட்டியலில் 144 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி மகேந்திர சிங் தோனி 6 சதங்கள் அடித்திருக்கும் நிலையில், 58 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 6 சதங்கள் அடித்து தோனியின் சாதனையை பண்ட் சமன்செய்துள்ளார்.
இந்நிலையில் சிகப்பு பந்து கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு கடினமான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா “இன்னும் தோனியின் பெயர் பட்டியலில் இருக்கிறது” என்று அக்கூற்றை மறுத்துள்ளார்.
ரிஷப் பண்ட்டை தோனியுடன் ஒப்பிடும் கூற்று குறித்து பதில்பேசிய ஆகாஷ் சோப்ரா, “எம்எஸ் தோனியின் பெயர் இன்னும் பட்டியலில் உள்ளது, எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் தான் சிறந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான பதில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ரிஷப் பண்ட் SENA நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதங்களை பதிவுசெய்துள்ளார். இந்த விஷயத்தில், அவர் மற்றவர்களை விட முன்னிலையில் இருக்கிறாரே தவிர, இன்னும் தோனியை பின்னுக்கு தள்ளவில்லை” என்று மறுத்து பேசினார்.
ஆனால் தற்போது இல்லாவிட்டால் பின்னாளில் அவர் முறியடிப்பார் என்று கூறிய அவர், “வெறும் 58 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், ஏற்கனவே ஆறு சதங்களை ரிஷப் பண்ட் அடித்துள்ளார். இந்த நேரத்தில் அவர் தோனியை விட பெரியவராக இல்லாவிட்டாலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும்போது அனைத்து வீரர்களை விடவும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முடிப்பார்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.