2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம்.
இந்த எபிசோடில் நாம் பார்க்கப்போவது தொடர்ந்து ஏற்ற இறக்கங்களாக அமைந்த 1979 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி.
இரண்டாவது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் 1979ம் ஆண்டு நடந்தது. ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அந்தப் பிரிவில் இடம்பெற்றிருந்த அனைத்து அணிகளையும் (பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கனடா) வீழ்த்தி முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. பி பிரிவில் இடம்பெற்றிந்த நியூசிலாந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக தோற்றிருந்தாலும், இந்தியாவையும் இலங்கையையும் வீழ்த்தி அந்த குரூப்பில் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த இரு அணிகளும் மோதிய அரையிறுதிப் போட்டி மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஜூன் 20ம் தேதி நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மார்க் பர்கஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெஃப்ரி பாய்காட் இரண்டே ரன்களில் ரிச்சர்ட் ஹாட்லியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெய்ன் லார்கின்ஸும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, 38 ரன்களுக்குள்ளாகவே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. ஆனால் அடுத்து வந்த கிரஹாம் கூச், கேப்டன் மைக் பிரீர்லியோடு இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தியதோடு, பொறுமையாக ரன் சேர்க்கவும் தொடங்கினர்.
அரைசதம் கடந்தவுடனேயே கேப்டன் பிரீர்லி ஜெரமி கோனியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு டெரக் ரேண்டால், இயன் போத்தம் இருவரும் கிரஹாம் கூச்சுக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தனர். போத்தம் 21 ரன்களிலும், கூச் 71 ரன்களிலும் வெளியேற இங்கிலாந்தின் சரிவு மீண்டும் தொடங்கியது. தாக்குப்பிடித்து முழு இன்னிங்ஸும் ஆடிய இங்கிலாந்து அணி, 60 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. அதிரடியாக (அந்தக் காலத்து அதிரடி!) 50 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் டெரக் ரேண்டால். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிரயன் மெக்கென்னி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
222 என்ற இலக்கை எதிர்நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவரான ஜான் ரைட், புரூஸ் எட்கருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தார். கிறிஸ் ஓல்ட் பந்துவீச்சில் முதல் விக்கெட்டாக எட்கர் வெளியேற, ஜெஃப் ஹோவர்த்தை விரைவில் வெளியேற்றினார் ஜெஃப்ரி பாய்காட். அடுத்து வந்த ஜெரமி கோனி விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள ஜான் ரைட் ரன் சேர்க்கும் வேலையை தன் தோள்களில் எடுத்துக்கொண்டார்.
கிரிக்கெட் அரங்கில், அதிலும் குறிப்பாக உலகக் கோப்பை அரங்கில் நாம் தென்னாப்பிரிக்க அணியை சோக்கர்கள் என்று சொல்வோம். அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார்கள் நியூசிலாந்து அணியினர். தொடர் முழுக்க சிறப்பாக ஆடிவிட்டு கடைசி கட்டத்தில் சொதப்புவார்கள். 2015 உலகக் கோப்பை ஃபைனல், 2019 உலகக் கோப்பை ஃபைனல், 1992 உலகக் கோப்பையின் அரையிறுதி என பல்வேறு உதாரணங்கள் சொல்லலாம். அதேபோலத்தான் இந்த 1979 அரையிறுதியும்.
222 என்ற டார்கெட்டை சேஸ் செய்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 120 ரன்களை எடுக்க கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் வேறு களத்தில் இருக்கிறார். அப்படியொரு நிலையில் இருந்து போட்டியை இழந்தது நியூசிலாந்து அணி.
அணியின் ஸ்கோர் 104 ரன்களாக இருந்தபோது கோனி வெளியேறினார். அதன்பிறகு நியூசிலாந்து அணியின் சரிவு தொடங்கியது. அடுத்த சில பந்துகளிலேயே ஜான் ரைட் ரன் அவுட் ஆனார். 137 பந்துகள் சந்தித்த அவர் 69 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன்பிறகு வந்த வீரர்களில் கிளென் டர்னர் 30 ரன்களும், வாரன் லெஸ் 23 ரன்களும் எடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்ததோடு அதிரடியாகவும் ஆடிய வாரன் லெஸ், லான்ஸ் கெய்ர்ன்ஸ் இருவரையும் மைக் ஹெண்ட்ரிக் வெளியேற்றினார். இறுதியில் 60 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து. அதனால் 9 ரன்களில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.