ரோகித் சர்மா கேப்டனாகும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் சிங் போன்ற ஸ்டார் வீரர்கள் அணியில் இருந்தபோதும் கூட, 2013 ஐபிஎல் தொடரின் பாதியிலிருந்து ரிக்கி பாண்டிங் கையிலிருந்து கேப்டன்சி ரோகித் சர்மாவின் கைகளுக்கு வந்துசேர்ந்தது.
ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஸ்டார் பேட்டர்கள் இருந்தபோதும் கூட, 2013 ஐபிஎல் தொடரின் பைனலில் பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக இளம் வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் களம்கண்டது.
யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 148 ரன்களை டிஃபண்ட் செய்த ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி, சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது. அதற்கு பிறகு மும்பை அணிக்காக ரோகித் சர்மா செய்தது எல்லாம், காலத்தால் மறக்கமுடியாதது.
மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக ரோகித் சர்மா இருக்கும் நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித்தை நீக்கிய MI நிர்வாகம், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமித்தது. கேப்டன்சி மாற்றம் என்பது எல்லா அணியிலும் நிகழக்கூடிய ஒன்றாக இருந்தாலும், ஒரு சாம்பியன் கேப்டனை எப்படி வெளியேற்றக்கூடாதோ அப்படியான முறையில் ரோகித்தை மும்பை அணி வெளியேற்றியது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் கோவத்தை ஏற்படுத்தியது. மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் கூட ரோகித் சர்மாவின் அதிரடி நீக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரோகித் சர்மா 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லமுடியாமல் போனதும், ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பையை வென்றதும், 2023-ல் ரன்னர் அணியாக வந்ததும் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி நீக்கம் ரோகித் சர்மாவிடம் சொல்லப்படவில்லை என்றும், இது முழுக்க முழுக்க ரோகித்திற்கு அவமரியாதை செய்யும் செயல் என பொங்கிஎழுந்த ரோகித்தின் ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை சமூகவலைதளங்களில் UNFollow செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
மும்பை அணி முடிவின் மீது ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்துவரும் நிலையில், ரோகித் சர்மாவின் கேப்டன்சி நீக்கம் குறித்து விளக்கமளித்திருந்தார் மார்க் பவுச்சர்.
ஸ்மாஸ் ஸ்டார் உடனான போட்காஸ்ட்டில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி நீக்கம் குறித்து பேசிய பவுச்சர், “இது முற்றிலும் கிரிக்கெட் சார்ந்த முடிவு. மும்பை அணியில் இது ஒரு மாற்றத்திற்கான நேரம். இது இந்தியாவில் நிறைய பேருக்கு புரியவில்லை, மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் உணர்ச்சிகளை விலக்கிவிட்டு பார்க்கவேண்டும். ரோகித் சர்மா கடந்த காலங்களில் பேட்ஸ்மேனாக சொதப்பி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார். இதனால் அழுத்தம் காரணமாக அவரால் சரியாக விளையாடமுடியவில்லை. மும்பை அணியில் கேப்டனாக இல்லாத சூழலில் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்யமுடியும். அதனால்தான் அவர் நீக்கப்பட்டார், இது முழுக்க முழுக்க கிரிக்கெட் சார்ந்த முடிவு” என கூறியிருந்தார்.
இந்த வீடியோ பதிவில் கமெண்ட் செய்த ரோகித் மனைவி ரித்திகா, “இதில் கூறப்பட்டிருப்பதில் பெரும்பாலனவை பொய்” என பதிவிட்டார். அவருடைய கமெண்டிற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதன்காரணமாக மார்க் பவுச்சர் பேசிய வீடியோ இணையத்திலிருந்து டெலிட் செய்யப்பட்டது.
ரோகித் மனைவி ரித்திகா கமெண்ட் செய்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் ஒருவரையொருவர் இன்ஸ்டாகிராமில் அன்ஃபால்லோவ் செய்ததாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அது உண்மைதானா என ஃபேக்ட் செக் செய்த இந்தியா டுடே, இருவரும் தற்போது ஒருவரையொருவர் பின் தொடரவில்லை எனவும், ஆனால் இதற்கு முன்னர் அவர்கள் பின் தொடர்ந்தார்களா இல்லை இப்போதுதான் பின் தொடர்வதை நிறுத்தினார்களா என்ற கேள்வியை முன்வைத்தது. ஆனால் பலர் ரோகித்-ஹர்திக் இருவரும் இதற்கு முன்னர் பின் தொடரவே இல்லை என்று கருத்தை முன்வைத்தனர்.
இதுபோன்ற சூழலில்தான் தற்போது தன்னுடைய ரித்திகாவிற்காக ரோகித் சர்மா ஒரு ஸ்பெசல் பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரோகித் சர்மா, தன்னருகில் மனைவி ரித்திகா இருக்கும் புகைப்படத்தோடு “𝗔𝗹𝘄𝗮𝘆𝘀 𝗯𝘆 𝗺𝘆 𝘀𝗶𝗱𝗲” எப்போதும் என் பக்கம் நிற்கும் நபர் என்ற டேக் லைனோடு மனைவியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
தற்போது ரோகித் சர்மாவின் இன்ஸ்டா பதிவை வைரலாக்கி வரும் ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சித்து வருகின்றனர்.