2023 உலகக்கோப்பை தொடரில் இரண்டுமுறை சாம்பியனான இந்தியாவும் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இவ்விரு அணிகளும், இன்று (நவ. 19) குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், கே.எல்.ராகுலும் 66 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில், போட்டியின்போது பாதுகாப்பைமீறி பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் ஆடுகளத்தினுள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார். பின்னர் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதுகுறித்து அவர், “என்னுடைய பெயர் ஜான். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறேன். விராட் கோலியைக் காணவே மைதானத்திற்குள் நுழைந்தேன். நான் ஒரு பாலஸ்தீன ஆதரவாளன்” எனத் தெரிவித்துள்ளார்.