2023 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, இந்திய இளம்வீரர்கள் படை, ஆஸ்திரேலிய இளம்படையுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி, நேற்று (நவ.23) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை வெற்றிகரமாக 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. இதுவரை இந்திய அணி 5 முறை 200 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக டி20 போட்டியில் சேசிங் செய்திருக்கிறது.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எடுத்திருந்த நிலையில், இதற்கு முன்பாக 2019-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 208 ரன்களையும், 2009-ல் இலங்கைக்கு எதிராக 207 ரன்களையும், 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக 204 ரன்களையும், 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 202 ரன்களையும் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா 4 முறையும், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 3 முறையும் சேசிங் செய்துள்ளன.
இதேபோன்று 209 ரன்கள் என்ற இலக்கை நேற்று இந்தியா வெற்றிகரமாக துரத்தியதன்மூலம் தங்களுடைய தனிப்பட்ட சாதனையை முறியடித்து இருக்கிறது. இதற்குமுன்பு வெஸ்ட் இண்டீஸ் எதிராக 208 ரன்களை இந்தியா வெற்றிகரமாக துரத்தியதே இந்தியாவின் தனிப்பட்ட சாதனையாக இருந்தது. அதனை நேற்று இந்தியா முறியடித்து இருக்கிறது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார். அவர் ஒருவேளை அந்தப் போட்டியில் கூடுதலாக ஓர் அரைசதம் அடித்திருந்தால்கூட, இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில்தான், டி20 தொடரில் கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கும் சூர்யகுமார் யாதவ் நேற்று ஒரு சாதனை படைத்தார். அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 100-வது சிக்ஸரை அடித்துள்ளார். அவர் 47 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். தவிர, 3-வது வீரராகக் களம் இறங்கி சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில், இயன் மோர்கன் 107 இன்னிங்ஸில் 120 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 98 இன்னிங்ஸில் 106 சிக்ஸர்கள் அடித்துள்ள விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார். டேவிட் மில்லர் அதே 98 இன்னிங்ஸில் 105 சிக்ஸர்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் சூர்யகுமார் 4-வதாக இணைந்துள்ளார். இதேபோன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை அரைசதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் தோனி, ரிஷப் பண்ட் ஆகியோரின் சாதனையை இரண்டு முறை அரைசதம் அடித்து இசான் கிஷன் சமன் செய்திருக்கிறார். இந்தப் பட்டியலில் கே.எல்.ராகுல் 3 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.