உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரவாரம் ஏதும் இன்றி அமைதியாய் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சிப் போட்டியில் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பந்த் 53 ரன்களை எடுத்து retd outல் வெளியேறினார். பின் வந்த ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 40 ரன்களை குவித்து அசத்தினார். பின் வந்த வங்கதேச வீரர்களை வரிசையாய் வெளியேற்றினர் இந்தியப் பந்துவீச்சாளர்கள். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்களை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில், துபே, அர்ஸ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பும்ரா, சிராஜ், பாண்டியா, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நடுவே ரசிகர் ஒருவர் மைதானத்தில் இறங்கி ரோகித்தை காண ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப நாட்களாக மைதானத்திற்குள் ரசிகர்கள் இறங்கி வீரர்களை நோக்கி ஓடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஐபிஎல் போட்டியில் கூட தோனியை நோக்கி ரசிகர் ஓடி வந்த வீடியோ வைரலானது.
வங்கதேசத்துடனான போட்டியின்போதுகூட ரசிகர் பவுண்டரி லைனைக் கடந்துவந்து ரோகித்தை பிடித்துக் கொண்டார். இந்தாண்டு மட்டும் ரோகித் சர்மாவைக் காண ரசிகர் ஒருவர் ஓடி வருவது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக மைதானத்திற்குள் வந்த நியூயார்க் போலீசார், குற்றவாளியை பிடிப்பதுபோல், அவரை தரையில் விழவைத்து கடுமையாக நடந்துகொண்டனர். ஆனால் ரோகித் சர்மா, காவல்துறையினரிடம் எளிமையாக வெளியே கொண்டுபோகச்சொன்னார். இதன் பின்னரே மைதானத்திற்குள் வந்தவரை நடக்கவைத்து வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.