சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆந்திர விக்கெட் கீப்பர் வம்சி கிருஷ்ணா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் தாமன்தீப் சிங்கின் ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்களை பறக்க விட்டார். 22 வயதான வம்ஷி அப்போட்டியில் சதம் விளாசியும் அசத்தினார். வம்சி 6 சிக்ஸர்கள் விளாசிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஒய் எஸ் ராஜா ரெட்டி ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆந்திர பிரதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை எடுத்திருந்தது. கிருஷ்ணா 110 ரன்களை எடுத்திருந்தார். 171 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய அவர் 9 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் விளாசி இருந்தார். ஆனால், ரயில்வே 9 விக்கெட்களுக்கு 865 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை பதிவு செய்திருந்தது. ரயில்வே வீரர்களில் 2 பேர் இரட்டை சதமும் ஒருவர் சதமும் பதிவு செய்தனர்.
இதன் மூலம் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் விளாசிய இந்தியர்கள் பட்டியலில், ரவி சாஸ்திரி (1985), யுவராஜ் (2007), ருதுராஜ் கெய்க்வாட் (2022) ஆகியோருக்கு அடுத்ததாக வம்ஷி கிருஷ்ணாவும் தற்போது இணைந்துள்ளார்.
பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ரவி சாஸ்திரி இந்த சாதனையைப் படைத்திருந்தார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் இந்த சாதனையைப் படைத்தார். ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில் ஓவரின் ஆறு பந்துகளையும் சிதறடித்த அவர் 12 பந்துகளில் அரைசதமடித்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டினார். உள்நாட்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உத்தரப்பிரதேசத்திற்கு எதிரான போட்டியின் போது மகாராஷ்ட்ராவுக்காக ஆடிய கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு மற்றவர்களை விட ஒருபடி முன்னே உள்ளார்.