குருஸ்வாமி அஜிதேஷ் to குர்ஜப்நீத் சிங்.. TNPL 2023 சீசனில் மாஸ் காட்டிய டாப்-5 பெர்ஃபாமர்ஸ்!

பல அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ்கள் கொடுத்த இந்த சீசனின் 5 சூப்பர் பெர்ஃபாமர்களைப் பற்றிப் பார்ப்போம்.
TNPL
TNPLFacebook
Published on

2023 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது லைகா கோவை கிங்ஸ். கடந்த ஆண்டு டி.என்.பி.எல். கோப்பையை பகிர்ந்துகொண்டிருந்த அணி, இந்த ஆண்டு அதை முழுமையாக வென்றுவிட்டது. விளையாடிய 9 போட்டிகளில் எட்டு போட்டிகளை வென்று முழு ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணி. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் இல்லாமல் நடந்த முதல் டி.என்.பி.எல். இறுதிப்போட்டி இதுதான். பல அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ்கள் கொடுத்த இந்த சீசசின் 5 சூப்பர் பெர்ஃபாமர்களைப் பற்றிப் பார்ப்போம்.

குருஸ்வாமி அஜிதேஷ்
குருஸ்வாமி அஜிதேஷ்

குருஸ்வாமி அஜிதேஷ் - நெல்லை ராயல் கிங்ஸ்

இந்த சீசனின் தொடர் நாயகன் விருது வென்றவர் குருஸ்வாமி அஜிதேஷ் தான். இந்த சீசனின் டாப் ஸ்கோரரான அவர் 10 இன்னிங்ஸ்களில் 385 ரன்கள் விளாசினார். சாம்பியன்கள் லைகா கோவை கிங்ஸ் தோற்ற ஒரேயொரு போட்டியின் ஆட்ட நாயகன் இவர்தான். அந்தப் போட்டியில் சதமடித்து அசத்தினார் அஜிதேஷ். தொடரின் கடைசி கட்டத்தில் தொடர்ந்து 3 அரைசதங்கள் அடித்து நெல்லை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தார் அவர்.

நம்பர் 3 பொசிஷனில் அட்டகாசமாக விளையாடி அந்த அணியின் தூணாக விளங்கிய அஜிதேஷுக்கு 20 வயது தான் ஆகிறது. கடந்த சையது முஷ்தாக் அலி தொடரில் ஓப்பனராக விளையாடிய அவர், நிச்சயம் இந்த சீசனில் பெரும் தாக்கம் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

சாய் சுதர்ஷன்
சாய் சுதர்ஷன்

சாய் சுதர்ஷன் - லைகா கோவை கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் எங்கு விட்டாரோ அங்கிருந்தே தொடங்கினார் சாய் சுதர்ஷன். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்களைப் பந்தாடியது போலவே TNPL தொடரில் ஒவ்வொரு பௌலரையும் அடித்து நொறுக்கினார். முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து அரைசதங்களாக விளாசித் தள்ளினார். விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் ஒன்றில் மட்டுமே 40 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்தார் அவர். அந்த அளவுக்கு கன்சிஸ்டன்ட்டாக ஆடி அசத்தினார் சாய் சுதர்ஷன். ஆறே இன்னிங்ஸ்களில் 371 ரன்கள் விளாசிய அவர் அதையும் 170+ என்ற ஸ்டிரைக் ரேட்டில் அடித்து அமர்க்களப்படுத்தினார். துலீப் டிராபி சவுத் ஜோன் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் அவர் பாதியில் வெளியேறவேண்டியதாக இருந்தது. மற்ற 3 போட்டிகளையும் ஆடியிருந்தால் நிச்சயம் இந்த சீசனின் டாப் ஸ்கோரர் ஆகியிருப்பார்.

பாபா அபரஜித் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

ஒவ்வொரு சீசனையும் போல் இந்த சீசனும் தன் அசத்தல் பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தினார் பாபா அபரஜித். பலமான அந்த அணியின் பேட்டிங் கிளிக் ஆக தடுமாறினாலும், தன்னால் முடிந்த அளவு தனியாகப் போராடினார் அவர். 7 போட்டிகளில் 283 ரன்கள் விளாசி இந்த சீசனின் நான்காவது டாப் ஸ்கோரராக உருவெடுத்தார் அபரஜித். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் வழக்கம்போல் பௌலிங்கிலும் அசத்தினார். 7 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர்.

ஆப் ஸ்பின் வீசக்கூடிய ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் - பல ஐபிஎல் அணிகளுக்கும் தேவையான ஒரு பொசிஷன். ஆனால் சரியான வாய்ப்புகள் இன்னும் இவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் 28 வயதுதான் ஆகிறது. அதனால் ஐபிஎல் தொடரில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை அபரஜித் நிச்சயம் தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

எம். ஷாரூக் கான் - லைகா கோவை கிங்ஸ்

இந்தப் பட்டியலில் ஷாரூக் கானின் பெயரைப் பார்க்கும்போது நிச்சயம் எல்லோரும் அவர் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பியிருப்பார், சிக்ஸர்களாக விளாசி பல ஆட்டங்களை ஃபினிஷ் செய்திருப்பார் என்று எதிர்பார்ப்போம். ஆனால், அவர் இந்தப் பட்டியலில் அவர் இருக்கக் காரணம் அவர்தான் இந்த TNPL சீசனின் டாப் விக்கெட் டேக்கர். 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் ஷாரூக் கான். விளையாடிய 9 போட்டிகளில் குறைந்தபட்சம் 1 விக்கெட்டாவது வீழ்த்தி அசத்தினார் அவர். அவரது ஆஃப் ஸ்பின் பௌலிங் அவர் அணிக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது.

ஐபிஎல் தொடரில் தன் அணிக்கு அவர் பந்துவீச்சை பெரிதாக நம்பவில்லை என்று வருத்தம் கொண்டிருந்த ஷாரூக், இந்த TNPL சீசனில் தான் ஒரு முழுமையான ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவர் பௌலிங் பஞ்சாப் கிங்ஸ் அடுத்த சீசனாவது பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். பந்துவீச்சு மட்டுமல்லாது, ஷாரூக்கின் கேப்டன்சியையும் பாராட்டியாகவேண்டும். சாய் சுதர்ஷன் போன்ற ஒரு ஸ்டார் பிளேயர் அணியில் இல்லாதபோதும் அது தெரியாத வகையில் அணியை சிறப்பாக வழிநடத்தினார் ஷாரூக்.

குர்ஜப்நீத் சிங்
குர்ஜப்நீத் சிங்

குர்ஜப்நீத் சிங் - சியாச்சம் மதுரை பேந்தர்ஸ்

மதுரை பேந்தர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியமான காரணமாக விளங்கினார் குர்ஜப்நீத் சிங். நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விக்கெட் எடுக்கத் தவறியிருந்தாலும், அடுத்த 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவர். 7.11 என்ற எகானமியில் சிக்கனமாகப் பந்துவீசிய அவர், ஒவ்வொரு இரண்டு ஓவர்களுக்கும் ஒரு விக்கெட் (ஸ்டிரைக் ரேட்: 11.86) வீழ்த்தினார். இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்நீத் பவர்பிளே, டெத் என இரண்டு ஃபேஸ்களிலும் சிறப்பாக செயல்பட்டார். தன்னுடைய உயரத்தைப் பயன்படுத்தி பந்தை நன்கு பௌன்ஸ் செய்ய வைக்கிறார் அவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com