2002-ல் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகளில் 3-1 என ஆதிக்கம் செலுத்திய இந்தியா கடைசி 2 போட்டிகளில் 2 மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையும். வான்கடே மைதானத்தில் கிடைத்த வெற்றியை தனது சட்டையை கழற்றி வெறித்தனமாக கொண்டாடுவார் பிளின்டாஃப்.
இங்கிலாந்து லார்ட்ஸில் நடைபெற்ற நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் பைனலில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. முதலில் ஆடிய இங்கி. 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. கடினமான இலக்கை துறத்திய இந்திய அணி 146 ரன்களில் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
கங்குலி, சேவாக், சச்சின் என 3 பேரும் போல்டாகி வெளியேற, ராகுல் டிராவிட் 5 ரன்னில் வெளியேறினார். போட்டியில் இங்கிலாந்தே வெற்றிபெறும் என்று நினைத்த போது களத்தில் போராடிய யுவராஜ் மற்றும் கைஃப் இருவரும் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர்.
கைஃப் நிதானமாக விளையாட, யுவராஜ் சிங் சிக்சர் பவுண்டரிகளாக அடித்துக்கொண்டிருந்தார். அப்போது சிங்கிள் எடுத்து யுவராஜ் கொடு என டிரஸ்ஸிங் ரூமிலிருந்து கங்குலி கூற, அடுத்த பந்தை கங்குலி இருக்கும் திசையிலேயே தூக்கி சிக்சரை அடிப்பார் கைஃப். அதற்கு பிறகு அவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருந்தது.
இங்கிலாந்தின் கோட்டை எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அதுவரை எந்த அணியுமே அவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்ததில்லை. கடைசிவரை போராடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். அந்த பெரிய வெற்றியின் கொண்டாட்டத்தை இங்கிலாந்தை பழிதீர்க்கும் வகையில் தன் சட்டையை கழற்றி சுற்றி கொண்டாடுவார் கங்குலி.