2008 ஆம் ஆண்டுக்கான u19 உலக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்திய அணியின் துணைக் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்பட்டார். டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட் போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிகளில் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 205 ரன்களை எடுத்திருந்தது. பின் விளையாடிய இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சனும் செயல்பட்டனர். இந்த தொடரிலும் இந்திய அணியில் ஜடேஜாவும் நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, போல்ட் இடம்பெற்றிருந்தனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 239 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
அந்த போட்டியில் விராட் 1 ரன்னில் வெளியேறி இருந்தாலும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களை எடுத்திருந்தார். அதில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடக்கம்.
2021 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தார். இந்திய அணியில் ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் சௌதீ, போல்ட் இடம் பெற்றிருந்தனர்.
இதனை அடுத்து தற்போது மீண்டும் இந்த 5 வீரர்களும் உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடுகின்றனர். இன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் 105 ரன்கள் விளாசினர்.