கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அவருடைய 100 சர்வதேச சதங்கள் மற்றும் 34,357 ரன்கள் என்ற மாபெரும் பேட்டிங் சாதனைகளுக்காக புகழப்படுகிறார். ஆனால் அதேநேரத்தில் பந்துவீச்சிலும் சில அசாத்திய சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் பதிவுசெய்துவிட்டு சென்றுள்ளார்.
இந்திய அணியின் பகுதிநேர ஸ்பின்னராக இருந்தாலும் “ஆஃப் பிரேக், லெக் பிரேக் மற்றும் கூக்ளி” என பல்வேறு வேரியேசன்களை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளராகவும் அசாத்திய சாதனைகளை படைத்துள்ளார்.
’கையில் இருக்கும் காப்புக்கம்பியை கீழறக்கிவிட்டு, ஃபீல்டர்களை அட்ஜஸ் செய்துவிட்டு, மிகப்பெரிய டர்னிங் டெலிவரிகளை வீசும்’ சச்சின் டெண்டுல்கரின் பவுலிங் ஆக்சனுக்கு விசிறியாக இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் 5 அசாத்திய சாதனைகள்..
ஒருநாள் போட்டிகளில் இறுதிஓவர்களில் வந்து கலக்கிப்போடும் சச்சின் டெண்டுல்கர், ”ஷேன் வார்னே, ஜாகீர் கான், கோர்ட்னி வால்ஷ், இம்ரான் கான் மற்றும் கபில் தேவ் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை விட, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை (2) கைப்பற்றி” தனித்துவமாக விளங்குகிறார்.
ODI கிரிக்கெட்டில் 50வது ஓவரில் பந்துவீசி 6 அல்லது அதற்கும் குறைவான ரன்களை பாதுகாத்த ஒரே பந்து வீச்சாளர் சச்சின் மட்டுமே. அதனை இரண்டு முறை செய்தவராக சச்சின் டெண்டுல்கர் மட்டுமே சாதனை புரிந்துள்ளார்.
குறைவான வயதில் ODI போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். அவர் இந்த மைல்கல் சாதனையை 18 வயது மற்றும் 181 நாட்களில் எட்டியுள்ளார்.
ஆசியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளராக சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். 6 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜாவுடன் சாதனையை சமன்செய்துள்ளார்.
ஒரு கிரிக்கெட் பந்துவீச்சாளர் தன்னுடைய டீன்ஏஜ் வயதிலும், 40 வயதிலும் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் என்றால், அந்த சாதனையை படைத்த ஒரேயொரு கிரிக்கெட் வீரர் சச்சின் ஆவார்.