இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 2011 உலகக்கோப்பைக்கு பிறகு 12 வருடங்களுக்கு பின் மோதிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசால் மெண்டீஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஸ்ரேயாஸ் 82 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 357 ரன்களை குவித்தது இந்தியா. 358 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்துவந்த பும்ரா மிரட்ட, அடுத்தடுத்து பந்துவீசிய முகமது சிராஜ் மற்றும் ஷமி இருவரும் இலங்கையை கதிகலங்க வைத்தனர். சிராஜ் ஒரே ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 3 விக்கெட்டுகளை சாய்க்க, இறுதியாக வந்து பந்துவீச்சில் மிரட்டிய ஷமி 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரமான தாக்குதலை சமாளிக்க முடியாத இலங்கை அணி, 19.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 55 ரன்னில் ஆல்அவுட்டானது.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும், உலகக்கோப்பையிலும் இந்திய அணிக்காக பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து அசத்தினார். அவர் படைத்த சாதனைகளை பார்க்கலாம்..
* 45 உலகக்கோப்பை விக்கெட்டுகள்:
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக மாறி வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இந்திய பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான் (44) மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத்தை (44) பின்னுக்கு தள்ளி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் ஷமி.
* அதிகமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை:
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதை அடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராக ஷமி சாதனை படைத்துள்ளார். 4 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ஷமி, 3 முறை அதை செய்திருந்த ஹர்பஜன் சிங் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத்தை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.
* உலகக்கோப்பையில் அதிகமுறை 5 விக்கெட்டுகள்:
உலகக்கோப்பையை பொறுத்தவரையில் 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் முகமது ஷமி, அதிகமுறை அதை செய்திருந்த மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
*6 முறை 4 விக்கெட்டுகள்:
கடந்த 3 உலகக்கோப்பை போட்டிகளாக அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் முகமது ஷமி, அதிகமுறை இதை செய்த ஒரே பவுலராக மாறி சாதனை படைத்துள்ளார்.
* தொடர்ச்சியாக 3 முறை 4 விக்கெட்டுகள்:
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முகமது ஷமி மட்டுமே தொடர்ச்சியாக 3 முறை 4 விக்கெட்டுகளை இரண்டு முறை பதிவுசெய்த முதல் இந்திய பந்துவீச்சாளராகும். இவர் ஏற்கனவே 2019 உலகக்கோப்பையிலும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இதை மூன்று செய்துகாட்டிய வாஹிர் யூனிஸ்க்கு பிறகு, இரண்டு முறை நிகழ்த்திய ஒரே உலக பந்துவீச்சாளரும் ஷமி மட்டுமே.