ravi shastri 5 best commentary
ravi shastri 5 best commentaryCricinfo

உணர்வோடு ஒட்டிய கிரிக்கெட் குரல்.. இதையெல்லாம் மறக்க முடியுமா! -ரவி சாஸ்திரியின் 5 சிறந்த வர்ணனைகள்!

இந்திய அணியின் ஒவ்வொரு பெரிய மேஜிக் தருணத்தின்போதும் ரவி சாஸ்திரியின் குரல் ஒரு லக்கி சார்மாக இருந்துள்ளது. அவருடைய அந்த கமெண்டரியை கேட்டாலே போதும் அந்த போட்டிகள் முழுவதுமாக அப்படியே நம் அகக்கண்ணில் வந்துபோகும்.

1. தோனியின் வின்னிங் சிக்ஸ் 2011 WC:

1983 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு 28 வருடங்களாக எட்டாக் கனியாக இருந்து வந்த உலகக்கோப்பைக் கனவு நிஜமான தருணம் அது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரிய மேஜிக் தருணத்தில், டெலிவிஷனில் ஒலித்த ரவி சாஸ்திரியின் சிறந்த வர்ணனை குரல் நம்மை இன்னும் அதே வைப்ரேஷனில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

இந்தியாவின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவையிருந்தபோது வெற்றிக்கான ரன்களை தோனி சிக்சராக மாற்றினார். அப்போது “Dhoni finishes off in style. A magnificent strike into the crowd. India lift the World Cup after 28 years. The party starts in the dressing room and it’s an Indian captain who’s been absolutely magnificent in the night of the final” என ஒலித்த ரவி சாஸ்திரியின் குரல் ஒவ்வொரு இந்திய ரசிகனின் கண்களிலும் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்து உணர்வோடு ஒன்றிப்போனது.

2. 2007 டி20 உலகக்கோப்பையின் த்ரில்லிங் வெற்றி!

கிரிக்கெட் உலகை தற்போது கட்டிப்போட்டு வைத்திருக்கும் டி20 கிரிக்கெட்டின் முதல் பதிப்பு அது. இந்திய அணி 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு பெரிய படுதோல்வியை சந்தித்து வெளியேறியதால், பெரிதும் இந்திய ரசிகர்களுக்கு 2007 டி20 உலகக்கோப்பை மீது பிடிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தியாவின் இளம் அணியை தோனி வழிநடத்திய விதம் இன்னும் ஒரு பிரமிப்பை விலகாமல் வைத்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் மோதினாலே அது பெரிய கொண்டாட்டம்தான். அப்படியிருக்கையில் 2007 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின.

2007 t20 wc final
2007 t20 wc final

இந்தியா அடித்த 157 ரன்களை விரட்டுவதில் பாகிஸ்தான் அணி வெற்றிகரமாகவே செயல்பட்டது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மிஸ்பா உல் ஹக் 4 சிக்சர்களை பறக்கவிட்டு 37 பந்துகளில் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் வெற்றிபெற கடைசி 6 பந்தில் 13 ரன்களும், இந்தியா வெற்றிபெற 1 விக்கெட்டும் தேவையாக இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் 2வது பந்தில் சிக்சரை பறக்கவிட்ட மிஸ்பா உல் ஹக், இந்திய ரசிகர்களின் தலைமீது இடியை இறக்கினார். கிட்டத்தட்ட இந்திய ரசிகர்களின் முகம் வாடியே போனது.

ஆனால் அடுத்த பந்திலேயே ”In the air, Sreesanth takes it, India win! Unbelievable scenes here at the bull ring” என்ற ரவி சாஸ்திரியின் குரல் ஒலித்தது. மிஸ்பா பின்பக்கமாய் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்க, அதை லாவகமாக கையில் ஏந்தினார் ஸ்ரீசாந்த். நொடி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது, தோனி ஸ்டம்பை பிடிங்கிக்கொண்டு ஓடிவருகிறார், பெவிலியனில் இருந்த இந்திய சப்போர்ட்டிங் ஸ்டாஃப் கிரவுண்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தனர். இந்தியா முதல் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டது, மிஸ்பா உல் ஹக் செய்த தவறுக்காக தலையை குனிந்து அமர்ந்திருக்கிறார். அப்போது ஒலித்த ரவி சாஸ்திரியின் குரல், இப்போதும் அந்த அற்புதமான தருணத்தை நம் நெஞ்சில் படரவிடும்.

3. யுவராஜ் சிங் அடித்த 6 பந்துகளுக்கு 6 சிக்சர்!

2007 டி20 உலகக்கோப்பையின் லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஒரு சாதாரண போட்டியாக அதுவரை சென்ற போட்டி, எப்போது இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப் மற்றும் யுவராஜ் சிங் இருவருக்குமான மோதலாக மாறியதோ அதற்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறியது. 21 வயது இளம் வீரரான ஸ்டூவர்ட் பிராடை பிரித்து மேய்ந்தார் அதிரடி வீரரான யுவராஜ் சிங். அதுவரை அப்படியொரு ஆட்டத்தை உலக கிரிக்கெட் ரசிகர்கள் கண்டதில்லை. பிராட் வீசிய 19வது ஓவரின் 6 பந்திலும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட யுவராஜ் சிங், ஒரு மிரட்சியையே ஏற்படுத்தினார்.

அந்த ஓவரில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்சர்களையும் எப்படி மறக்க முடியாதோ, அப்படியே ஒவ்வொரு சிக்சருக்கும் வர்ணனை செய்த ரவி சாஸ்திரியின் குரலை யாராலும் மறக்கவே முடியாது. தொடர்ச்சியாக 6வது சிக்சரை யுவராஜ் சிங் அடித்த போது, “Aaaand he’s put it away or has he? Yessssssssssss-into the crowd. Six sixes in an over. Yuvraj Singh finishes things in style. The first time it’s happened in 20-20 cricket” என ஒலித்த ரவி சாஸ்திரியின் குரல் கேட்க கேட்க சலிக்காதது.

4. சச்சின் டெண்டுல்கரின் முதல் இரட்டை சதம்!

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியப்பில் பார்த்துக்கொண்டிருந்த தருணம் அது. அதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் யாராவது 200 ரன்கள் அடிப்பார்கள் என்று கூறினால், ”யாராவது புயல்ல உக்காந்து பொரிகடல சாப்டுட்டு இருப்பாங்க அவங்ககிட்ட சொல்லுனு” நக்கல் அடிக்கும் உலகம். அப்படியிருந்த ஒட்டுமொத்த உலகத்தின் எண்ணத்தையும் பொய்யாக்கினார் கிரிக்கெட்டின் கடவுளான ”சச்சின் டெண்டுல்கர்”.

sachin 200
sachin 200

2010-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், டேல் ஸ்டெய்ன், பர்னல், ஹாக் காலிஸ் என சிறந்த பந்துவீச்சு யூனிட்டை வைத்திருந்த தென்னாப்பிரிக்காவிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் சர்வதேச இரட்டை சதத்தை (200 ரன்கள்) பதிவுசெய்தார் சச்சின் டெண்டுல்கர். அந்த மேஜிக் தருணத்தின் போதும் ஒரு லக்கி சார்மாக ஒலித்தது ரவி சாஸ்திரியின் குரல்.

சச்சினின் ஒரு வரலாற்று மைல்கல் சாதனையை, “Get’s it. First man on the planet to reach 200. And it’s the superman from India- Sachin Tendulkar. 200 from 147. Take a bow master” என்ற ஒரு மாயாஜால வர்ணனையோடு ஒவ்வொரு இந்திய ரசிகரிடமும் கொண்டு சேர்த்தார் ரவி சாஸ்திரி.

5. மறக்க முடியாத IND vs AUS மொஹாலி 1 விக்கெட் டெஸ்ட் வெற்றி!

2010ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலிய அணி 2-0 என டெஸ்ட் தொடரையும், 1-0 என ஒருநாள் தொடரையும் இழந்து ஒயிட் வாஷ் ஆனது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கிய ஆஸ்திரேலியா அணி ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுவிடும் நிலையில் தான் இருந்தது. அதை தனியொரு ஆளாக விவிஎஸ் லக்சுமனன் தான் தட்டிப்பறித்தார் என்றால் மிகையாகாது.

VVS Laxman
VVS Laxman

மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஷேன் வாட்சனின் அபாரமான சதத்தின் உதவியால் முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் சேர்த்தது. பதிலுக்கு பதில் என ஆடிய இந்திய அணியும் சச்சினின் 98 ரன்கள், ரெய்னாவின் 86 ரன்கள் உதவியால் 405 ரன்களை சேர்த்தது. 23 ரன்கள் முன்னிலை வகித்த ஆஸ்திரேலியா அணியை இரண்டாவது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்த விடாத இந்திய வீரர்கள் ஆஸியை 192 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். 216 ரன்களை விரட்டிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி தங்களுடைய அபாரமான பந்துவீச்சால் எழவே விடாமல் அடிக்குமேல் அடிகொடுத்தது.

ricky ponting
ricky ponting

124 ரன்களுக்கே இந்திய அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் எப்படியும் ஆஸ்திரேலியா அணிதான் வெற்றிபெறும் என்ற நிலையே இருந்தது. ஆனால் 9வது விக்கெட்டுக்கு இஷாந்த் சர்மாவோடு போராடிய விவிஎஸ் லக்சுமனன் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கனவை சிதைத்தார். இஷாந்த் சர்மா 92 பந்துகளை சந்தித்து 31 ரன்கள் சேர்த்து ஒரு நம்பமுடியாத ஆட்டத்தை ஆடினார். 9வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த இந்திய அணி விறுவிறுப்பான டெஸ்ட் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. கடைசிவரை தூணாக களத்தில் இருந்த விவிஎஸ் லக்சுமன் 79 பந்துக்கு 73 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

2 உலகக்கோப்பைகளை வென்றிருந்தாலும் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றியே பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை ரிக்கி பாண்டிங் வைத்துள்ளார். இந்த அற்புதமான போட்டியின் போதும் வர்ணனைபெட்டியில் ரவி சாஸ்திரி இருந்தார். போட்டிக்கு பிறகு அவர் உதிர்த்த வார்த்தைகள், “Get’s it away. Could this be a win for India? They go back for the second. It’s India that have won the Test match. A famous win. Unbelievable scenes in Mohali. VVS Laxman is the hero for India. The team will run out onto the park. Ricky Ponting will have to wait for his first-ever Test win in India. But these are scenes that you will never forget. Out of nowhere” இப்போதும் நம்மை அப்போட்டிக்குள் அழைத்துச்செல்லும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com