வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை அணி. டி20 தொடரை வென்ற பிறகு ‘டைம் அவுட்’ செலப்ரேசனை வெளிப்படுத்திய இலங்கை அணி, வங்கதேச அணியை வெறுப்பேற்றியது.
அதற்கு பிறகு நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று வெற்றிபெற்ற வங்கதேச அணி, இலங்கை அணியை வெறுப்பேற்றும் வகையில் ‘ஹெல்மெட்’ செலப்ரேசன் செய்து பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.
சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் 6 வீரர்கள் அரைசதமடித்து அசத்த, முதல் இன்னிங்ஸ் முடிவில் 531 ரன்களை குவித்தது இலங்கை அணி. அதற்குபிறகு விளையாடிய வங்கதேச அணி 178 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் 353 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி, 102 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளுடன் விளையாடிவருகிறது. மொத்தமாக 455 ரன்களை குவித்திருக்கும் இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றும் இடத்தில் தங்களை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் 3வது நாள் ஆட்டமான இன்றைய போட்டியில், பவுண்டரியை தடுக்க 5 வங்கதேச ஃபீல்டர்கள் ஒரே நேரத்தில் ஓடியது பார்ப்போரை சிரிக்க வைத்தது. ஹசன் மஹ்மூத் வீசிய 21வது ஓவரில் தான் இந்த வினோதமான காட்சி நடந்தது. ஹசன் மஹ்மூத் ஒரு லெந்த் பந்தை வீச, பேட்டிங்கில் இருந்த ஜெயசூர்யா அதை ஸ்லிப் திசையில் தட்டிவிட்டார். ஸ்லிப் திசையில் சென்ற பந்து ஃபீல்டர்களை கடந்து செல்ல, எல்லைக்கோட்டுக்கு சென்ற பந்தை தடுக்க ஐந்து பீல்டர்கள் ஒரே நேரத்தில் ஓடிச்சென்றனர். இந்த நிகழ்வு பார்ப்போரை நகைக்க வைத்த நிலையில், ரசிகர்கள் ட்ரோல் செய்துவருகின்றனர்.
இதேபோட்டியில் ஏற்கனவே மோசமான DRS ரிவ்யூ எடுத்த வங்கதேச கேப்டன் ஷாண்டோ ட்ரோல் மெட்டீரியலாக மாறிய நிலையில், அதைத்தொடர்ந்து கைக்குவந்த ஸ்லிப் கேட்ச்சை 3 வீரர்கள் சேர்ந்து, ஒருவரிடமிருந்து ஒருவரிடம் என மாறிமாறி சென்று பந்தை கோட்டைவிட்டது ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. இந்நிலையில் தற்போது 5 ஃபீல்டர்கள் ஒரே நேரத்தில் ஓடிய சம்பவமும் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
இதையெல்லாம் தாண்டி இலங்கை அணிக்கு எதிராக வங்கதேசம் “ஹெல்மெட்” செலப்ரேசன் செய்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடரை வெல்லும்போது இலங்கை வீரர்கள் என்ன செய்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நாகினி டான்ஸ் செலப்ரேசனில் தொடங்கிய வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான ரைவல்ரி, டைம் அவுட் சர்ச்சையை தொடர்ந்து ’வாட்ச் செலப்ரேசன்’ எல்லாவற்றையும் தாண்டி தற்போது ’ஹெல்மெட்’ செலப்ரேசனில் வந்து நின்றுள்ளது.