அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடக்கவிருப்பதால் ஒவ்வொரு அணிக்குமே இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இந்திய அணி தன் முதல் போட்டியில் வரும் சனிக்கிழமை பாகிஸ்தானை சந்திக்கிறது. இன்னும் இந்திய அணிக்கு முன் பல கேள்விகள் இருக்கும் நிலையில், எந்த நான்கு வீரர்களின் செயல்பாடு அதிகம் கவனம் பெறும்? பார்ப்போம்...
இந்திய அணியின் மிகவும் பிரச்னைக்குறிய இடமான நம்பர் 4 இடத்துக்கு சொந்தக்காரராக இருந்தவர். ராகுல் காயமடைந்ததால் மீண்டும் அந்த இடத்தில் யார் ஆடுவது என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக இந்திய ரசிகர்களின் மனதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ராகுல் தன்னுடைய ஃபிட்னஸை நிரூபிப்பது ஒரு தேவை என்றால், அவர் நன்றாக விளையாடி தன் செயல்பாட்டாலும் நம்பிக்கை கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனெனில், அந்த இடத்துக்கு இன்னும் சரியான பேக் அப்பை இந்திய நிர்வாகம் கண்டுபிடிக்கவில்லை.
இந்த பிரச்னைகளுக்கெல்லாம் மத்தியில், முதலிரு போட்டிகளில் ராகுல் விளையாடாமாட்டார் என்று மீண்டும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது அணி நிர்வாகம். நம்பர் 4 மட்டுமல்லாமல், ரிசப் பண்ட் இல்லாததால் விக்கெட் கீப்பர் ஸ்லாட்டுக்கும் பிரச்னை இருக்கும் நிலையில், ராகுலின் ஃபிட்னஸ் தொடர்ந்து கேள்வியாகவே இருந்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். மூன்றாவது போட்டியில் ராகுல் களமிறங்கினால் அதுவே இந்திய அணிக்கு மிகப் பெரிய வெற்றிதான்.
இந்திய ஒருநாள் அணியின் முக்கிய அங்கமாக உருவெடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் அவதிப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களாக எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இப்போது காயத்திலிருந்து குணமடைந்திருக்கும் அவர், இந்திய அணியில் நம்பர் 5 இடத்தை மீண்டும் தன்னுடையதாக்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காயம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், ஷ்ரேயாஸ் கம்பேக் கொடுப்பது மிகவும் அவசியம் ஆகியிருக்கிறது. ஒருநாள் அரங்கில் 46.60 என்ற அட்டகாசமான சராசரியோடு விளையாடிக்கொண்டிருந்த ஷ்ரேயாஸ், இந்தத் தொடரில் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினாலே அது அனைத்து தரப்புக்கும் நம்பிக்கை கொடுக்கும்.
இந்திய அணியின் உலகக் கோப்பை வாய்ப்புக்கு மிக மிக மிக முக்கியமான வீரர். சொல்லப்போனால் ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரையும் விட இந்தியாவுக்கு மிகப் பெரிய மேட்ச் வின்னராக விளங்கக்கூடியவர் பும்ரா தான். இவரும் காயத்திலிருந்து சமீபத்தில் தான் மீண்டு வந்திருக்கிறார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த அவர், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாகவும் செயல்பட்டார். அந்த டி20 தொடரில் ஃபிட்டாக இரண்டு போட்டிகளிலும் தன் கோட்டாவை முடித்த அவர், தன் அக்யூரசி, வேகம் இரண்டையும் வெளிப்படுத்தினார். இருந்தாலும் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் அவரால் முழு வீச்சோடு வீச முடியுமா என்ற கேள்வி எழுவது சகஜம் தான். பும்ராவால் இந்த ஆசிய கோப்பை தொடரில் 10 ஓவர்களை வீச முடிந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப் பெரிய பாசிடிவாக அமையும்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்களே இல்லை. அது திலக் வர்மாவுக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் அவர் சிறப்பாக விளையாட, அவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவேண்டும் என்று ஒருசில வல்லுநர்கள் அப்போதே கூறத் தொடங்கினார்கள்.
கே.எல்.ராகுல் இப்போது ஃபிட்னஸ் பிரச்சனையால் அவதிப்படுவதால் ஒருவேளை இவருக்கு ஏதேனும் லீக் போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வாய்ப்பை திலக் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும்பட்சத்தில் நிச்சயம் உலகக் கோப்பை அணியில் அவரால் இடம்பெற முடியும்.