டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து 744 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், பேட்டிங்கிலும் 14 அரைசதங்கள் மற்றும் 6 டெஸ்ட் சதங்களையும் அடித்து ஒரு தலைசிறந்த ஆல்ரவுண்டராக சாதனை படைத்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை தான் எப்படியான வீரர் என நிரூபிக்க களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 144/6 என்ற மோசமான நிலையில் இருந்தபோது, தன்னுடைய அபாரமான பேட்டிங்கால் 6வது டெஸ்ட் சதமடித்து 195 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் இந்தியாவை கரை சேர்த்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த கையோடு, உலக கிரிக்கெட் அரங்கில் 3 இமாலய சாதனைகளை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 என எந்த வடிவத்தை எடுத்துக்கொண்டாலும் ஆல்ரவுண்டர்களுக்கான மதிப்பு என்பது அதிகப்படியாகவே இருந்துவருகிறது. தன்னுடைய தொடக்க கால கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்து, பின்னர் ஸ்பின்னராக மாறிய ரவிச்சந்திர அஸ்வின் சுழற்பந்துவீச்சில் இந்திய ஜாம்பவான் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில், பந்துவீச்சில் சாதித்தது மட்டுமில்லாமல் சமீபகாலமாக பேட்டிங்கிலும் மிரட்டும் வரும் அஸ்வின், ஒரு ஆல்ரவுண்டராக எந்தவீரரும் படைக்காத சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளார்.
அந்தவகையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் அதிக சதங்கள் மற்றும் அதிக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் அஸ்வின்.
ஒரு மைதானத்தில் அதிக டெஸ்ட் சதங்கள் + 5 விக்கெட்டுகள்:
கார்பீல்ட் சோபர்ஸ் - ஹெடிங்லி (இரண்டு சதங்கள், 2 முறை 5 விக்கெட்டுகள்)
கபில் தேவ் - சென்னை (இரண்டு சதங்கள், 2 முறை 5 விக்கெட்டுகள்)
கிறிஸ் கெய்ர்ன்ஸ் - ஆக்லாந்து (இரண்டு சதங்கள், 2 முறை 5 விக்கெட்டுகள்)
இயன் போத்தம் - ஹெடிங்லி (இரண்டு சதங்கள், 3 முறை 5 விக்கெட்டுகள்)
*ரவிச்சந்திரன் அஸ்வின் - சென்னை (இரண்டு சதங்கள், 4 முறை 5 விக்கெட்டுகள்)
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். இதமூலம் 7வது விக்கெட் அல்லது அதற்கு கீழாக களமிறங்கி சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் பார்ட்னர்ஷிப் ரன்கள் பட்டியலில் 500* ரன்களை எட்டி இரண்டாவது இடம்பிடித்துள்ளனர். முதலிடத்தில் 617 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் கபில் தேவ் மற்றும் சையத் கிர்மானி கூட்டணி நீடிக்கிறது.
இந்தப் பட்டியலில் எம்.எஸ்.தோனி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் அடித்திருந்த 486 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முறியடித்து அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அஸ்வின் அடித்திருக்கும் 6 டெஸ்ட் சதங்களில், அவர் அதிகமாக 8வது வீரராக களமிறங்கியே அதிக சதங்களை அடித்துள்ளார். அவருடைய 6 சதங்களில் 8வது வீரராக 4 சதங்களை அடித்துள்ளார்.
இந்நிலையில் 8வது அல்லது அதற்கு கீழாக களமிறங்கி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அஸ்வின் 4 சதங்களை அடித்திருக்கும் நிலையில், டேனியல் விட்டோரி 5 சதங்களை அடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு பியூர் பேட்ஸ்மேனின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவிற்காக அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜா பதிவுசெய்து சாதனை படைத்துள்ளனர்.