ஐபிஎல் தொடர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அதிகப்படியான இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதில் தொடர்ந்து ஐபிஎல் தொடர் பெரிய பங்காற்றி வருகிறது. அதிலும் ஐபிஎல் தொடரின் இரண்டு டாப் டீம்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளிலிருந்து பல இளம்வீரர்கள் இந்திய அணியின் தொப்பியை கைப்பற்றி நிரந்தர வீரர்களாக மாறியுள்ளனர்.
அந்தவகையில் 2024 ஐபிஎல் தொடரிலும் சமீர் ரிஸ்வி என்ற 20 வயது உள்நாட்டு வீரரை அடையாளம் கண்டுள்ளது ஐபிஎல் தொடர். 2024 ஐபிஎல் ஏலத்தின் போது சமீர் ரிஸ்வியை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலத்த போட்டியில் இறங்கின. எப்போதும் அறிமுக வீரர்களுக்கு 5 கோடிக்கு மேல் ஏலம் செல்லாத சிஎஸ்கே அணி, சமீர் ரிஸ்விக்காக 8 கோடிவரை சென்றது ஆச்சரியமளித்தது. இறுதிவரை சமீர் ரிஸ்வியை சென்னை அணி விட்டுக்கொடுக்காத போது, தோனி இவரை விட்டுவிடக்கூடாது என்ற அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறார் என்பதை சென்னை ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு ‘யார் இந்த சமீர் ரிஸ்வி?’ என்ற தேடல் சமூகவலைதளங்களில் அதிகமானது. தேடலின் முடிவுக்கு வந்த ரசிகர்கள் வலது கை பேட்டர் சமீர் ரிஸ்வியின் அதிரடி பேட்டிங் குவாலிட்டியை பார்த்து, “வலது கை சுரேஷ் ரெய்னா என்றும், ராயுடுவுக்கு சரியான மாற்றுவீரர் என்றும், தோனி ரோலில் இவர் தான் விளையாட போகிறார் என்றும்” பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட உத்திர பிரதேச வீரர் சமீர் ரிஸ்வி, தற்போது பிசிசிஐ நடத்திவரும் சிகே நாயுடு டிரோபி என்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரின் காலிறுதிப்போட்டியில் 312 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
பிசிசிஐ நடத்திவரும் சிகே நாயுடு டிரோபியின் காலிறுதிப்போட்டியானது நடந்துவருகிறது. முதல் காலிறுதிப்போட்டியில் சமீர் ரிஸ்வி தலைமையிலான உத்திரபிரதேச அணியும், ஜே கோஹில் தலைமையிலான சௌராஸ்டிரா அணியும் விளையாடிவருகின்றன.
முதலில் பேட்டிங் செய்த உத்திரபிரதேச அணியில் 184 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் போனபோது 5வது வீரராக களமிறங்கிய கேப்டன் சமீர் ரிஸ்வி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். சிக்சர் பவுண்டரிகள் என நாலாபுறமும் பறக்கவிட்ட அவர், 266 பந்துகளை எதிர்கொண்டு 33 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களுடன் 312 ரன்கள் குவித்தார். சமீர் ரிஸ்வியின் ருத்ரதாண்டவத்தால் உத்திரபிரதேச அணி 746 ரன்கள் குவித்தது.
சமீபத்தில் நடைபெற்ற உத்திரபிரதேச T20 லீக்கில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக ஒன்பது இன்னிங்ஸ்களில் விளையாடிய ரிஸ்வி, இரண்டு சதங்கள் உட்பட 455 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல சையத் முஷ்டாக் அலி டிராபியில் தனது சிக்ஸ் ஹிட்டிங் திறனைப் வெளிப்படுத்திய ரிஸ்வி, 18 சிக்சர்களை பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
தோனியை போலவே சிக்ஸ் ஹிட்டிங்கிற்கு பெயர் போனவரான சமீர் ரிஸ்வி, அதற்குமேல் கேப்டன்சிப் மற்றும் ஃபினிசிங் ரோல் இரண்டிலும் தோனியை பிரதிபலிக்கிறார். எம்எஸ் தோனி கடந்த ஐபிஎல் தொடரில் கூட 3 அல்லது 4 பந்துகளை மட்டுமே விளையாடிய நிலையில், சமீர் ரிஸ்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர ஃபினிசராக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.
ராயுடு இல்லாத நேரத்தில் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடும் ஒரு தரமான வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் வசப்படுத்தியுள்ளது. தோனி போன்ற ஒரு தலைசிறந்த கேப்டனுக்கு கீழ் விளையாடினால் விரைவில் 2024 ஐபிஎல் தொடரை சமீர் ரிஸ்வி கலக்க வாய்ப்பிருக்கிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட் முதலிய வீரர்கள் வரிசையில் சமீர் ரிஸ்வியும் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சமீர் ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், ”தோனியின் தேர்வு தப்பாகுமா” என்று புகழ்ந்து வருகின்றனர்.