டிசம்பர் 21ஆம் தேதியான இன்று ஜிம்பாப்வே அணியின் ஆல்-ரவுண்டர் வீரர்களான வெஸ்லி மாதேவெரே மற்றும் பிராண்டன் மவுடா முதலிய வீரர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்.
வீரர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான சோதனையில் பாசிட்டிவ் என வந்ததால், ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறியதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
23 வயதான மாதேவெரே 2022 டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணியில் ஸ்டார் வீரராக ஜொலித்தார். ஜிம்பாப்வே அணிக்காக அனைத்து வடிவங்களிலும் 98 போட்டிகளில் விளையாடியிருக்கும் மாதேவெரே, தற்போது பரபரப்பாக நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் 3 போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார்.
அதேபோல 26 வயதான மவுடா, ஜிம்பாப்வே அணிக்காக 26 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரும் அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் இடம்பெற்றிருந்தார். இந்த இரண்டு வீரர்கள் மீதான நடவடிக்கை என்பது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தகுதிநீக்கத்திற்கு பிறகு நடந்துள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அறிவித்திருக்கும் செய்தியின் படி, “சம்பந்தப்பட்ட வீரர்கள் வெஸ்லி மாதேவெரே மற்றும் பிராண்டன் மவுடா இருவரும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின் போது விளையாடிகொண்டிருக்கும் போட்டிக்கு முன்னதாக ஒரு தடைசெய்யப்பட்ட பொழுதுபோக்கு மருந்தை எடுத்துக்கொண்டதற்காக சோதனை செய்யப்பட்டனர். அதில் இருவரும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளனர். அவர்கள் விரைவில் ஒழுங்கு விசாரணைக்கு ஆஜராகும் நிலையில் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு எடுக்கப்படும் முடிவானது அவர்களின் இடைநீக்கத்தின் காலத்தை தீர்மானிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.