கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை சீண்டுவது அடிக்கடி நடக்கும். இதில் பேட்ஸ்மேனை கோபப்படுத்தி அவரது கவனத்தை சிதறச் செய்யும் போது, பேட்ஸ்மேன் பந்தை அடிக்க நினைத்து, தவறாக ஆடி தனது விக்கெட்டை பறிகொடுப்பார். ஆனால், சில சமயங்களில் தலைகீழாக நடக்கும். பந்துவீச்சாளர்களின் அடுத்தடுத்த பந்துகளை பேட்ஸ்மேன்கள் சிதறடிப்பர். அப்படி ஒன்று தான் அன்றும் நடந்தது.
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 லீக் போட்டி டர்பனில் நடைபெற்றது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்ய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.
தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா தனது விக்கெட்டை 6 ரன்களில் பறிகொடுத்த பின் யுவராஜ் களமிறங்கினார். அவர் களமிறங்கும் போது 20 பந்துகள் மீதமிருந்தது. அப்போது 18 ஆவது ஓவரை வீசிய ஃப்ளிண்டாப் மற்றும் யுவராஜிற்கு இடையே வாக்குவாதம் எழுந்தது. அப்போது எழுந்த ஒட்டு மொத்த கோபத்தையும் அதற்கடுத்த ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பிராட்டிடம் காட்டினார் யுவராஜ்
6 பந்துகளில் 6 சிக்ஸர்களை மைதானத்தின் நாலாப்புறமும் சிதறடித்தார். மைதானத்தில் இருந்த அத்தனை திசைகளிலுக்கும் பந்துகள் பறந்தன. ஓவர் மிட் விக்கெட், பேக்வார்ட் ஸ்கொயர் லெக், டீப் எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன் என எதுவும் மிச்சம் வைக்கப்படவில்லை. 12 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் யுவராஜ். தற்போது வரை இதுவே உலகசாதனை. ஆட்டத்தில் மொத்தமே அவர் எதிர்கொண்டது 16 பந்துகள். ரன்களோ 58. 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என விளாசி 363.50 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இந்திய அணி உட்பட எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார் யுவராஜ் சிங்.
அந்த போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 218 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணியோ 6 விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 200 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சாத்.. சாத்.. யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். தொடரில் இந்திய அணி கோப்பையையும் வென்றது.
யுவராஜ் சிங் அந்த சாதனையை படைத்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிறது. அதற்கடுத்து ஏகப்பட்ட பேர் அச்சாதனையை செய்துள்ளனர். ஆனாலும் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள் ஒவ்வொன்றும் பசுமரத்தாணி.
அப்போது தனது கிரிக்கெட் வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தார் ஸ்டூவர்ட் பிராட். ஆனால் போட்டியென்று வந்துவிட்டால் யாராக இருந்தால் என்ன? இந்தாண்டு ஜூலை மாத இறுதியில் ஸ்டூவர்ட் தனது ஓய்வை அறிவிக்கும் போது யுவராஜ் தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டுகளில் யுவராஜ் தனது ஓய்வை அறிவிக்கும் போது அதுவரை 304 ஒரு நாள் போட்டிகளிலும், 58 டி 20 போட்டிகளிலும், 40 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருந்தார். விளையாடிய வரை தான் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கிங் என நிரூபித்தவர்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நிகழ்வுகளின் பட்டியலில் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள் என்றும் இருக்கும்.