ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போதெல்லாம் அவர்களின் மண்ணில் மூன்று விதமான அணியுடன் இந்தியா விளையாடவேண்டியிருக்கும். ஒன்று ஆஸ்திரேலிய வீரர்களின் சிறந்த திறமைகளுடன் அவர்களின் வார்த்தை மோதல்களையும், ஸ்லெட்ஜிங்களையும் எதிர்கொள்ள வேண்டும், மற்றொன்று வேகமான மற்றும் பவுன்சி டிராக்களை கொண்ட ஆடுகளங்கை சமாளிக்க வேண்டும், மூன்றாவதாக அந்நாட்டின் ரசிகர்களுக்கு எதிராகவுமே நீங்கள் விளையாட வேண்டியிருக்கும்.
இந்த மூன்று களங்களையும் வெற்றிக்கொள்ளும் அணியால் மட்டுமே ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை வீழ்த்த முடியும். இந்தியா கடந்த 2018, 2021 இரண்டு தொடர்களை வென்ற போதும் மட்டுமில்லாமல் அதற்கு முந்தைய தொடர்களிலும் கூட இந்த 3 சவால்களையும் எதிர்கொண்டுள்ளது.
முந்தைய தொடர்களை இழந்த போதிலும் கூட பல திறமையான இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய மண் இந்திய கிரிக்கெட் அணிக்கு கண்டுபிடித்து கொடுத்துள்ளது. பல இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா மண்ணில் ஜொலித்த பிறகே தங்களை ஒரு சாம்பியன் வீரர்களாக உருமாற்றிக்கொண்டுள்ளனர்.
அப்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் சிறந்து விளங்கிய 10 இந்திய வீரர்களை பற்றித்தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கவிருக்கிறோம்..
1992 சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியா மண்ணில் 0-4 என இந்திய அணி தொடரை இழந்தாலும், 18 வயதான சச்சின் டெண்டுல்கர் என்ற சாம்பியன் வீரரை அடையாளம் கண்டுகொண்டது உலக கிரிக்கெட். பதினெட்டே வயதான சச்சின் டெண்டுல்கர் சிட்னியில் நடந்த போட்டியில் தலைசிறந்த பவுலர்களுக்கு எதிராக ஆட்டமே இழக்காமல் 148 ரன்களும், அதிக பவுன்சர்கள் நிரம்பிய பெர்த் மைதானத்தில் 114 ரன்களும் எடுத்து ஒரு சிறந்த தொடரை கொண்டிருந்தார் சச்சின். 18 வயது சச்சின் அடித்த 368 ரன்களே அந்த தொடரில் ஒரு இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக பதிவுசெய்யப்பட்டது.
அதே தொடரில் வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜவஹல் ஸ்ரீநாத், தலைசிறந்த அவே ஹோம் ஸ்பெல்லை கொண்டிருந்தார். 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் மட்டுமே இந்தியாவின் ஒரே பந்துவீச்சு நம்பிக்கையாக அந்த தொடரில் ஜொலித்தார்.
முடிவு ரீதியில் முற்றிலும் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் தொடராக இருந்தாலும், VVS லக்ஷ்மண் தனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றை செதுக்கினார். சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 198 பந்துகளில் 167 ரன்கள் எடுத்த அவரது நேர்த்தியான பேட்டிங், ஆஸ்திரேலியாவின் அற்புதமான வேகப்பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக சிறந்த இன்னிங்ஸை கொண்டிருந்தது. அவரின் இந்த ஆட்டம் இந்திய ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் எதிரணி வீரர்களிடமிருந்தும் மரியாதையைப் பெற்றுக்கொடுத்தது.
2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 19 வயதான இர்பான் பதான் அறிமுகமானார். ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் கூர்மையான டெலிவர்களை வீசிய பதான், ஸ்டீவ் வா மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்களை பெவிலியன் அனுப்பினார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இர்ஃபான் பதான் தன்னுடைய திறமையை குறுகிய போட்டிகளிலேயே அடையாளப்படுத்தினார்.
துணிச்சலான மற்றும் அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் போனவரான விரேந்திர சேவாக், 233 பந்துகளில் 195 ரன்கள் குவித்து மெல்போர்ன் மைதானத்தை ஒளிரச் செய்தார். இரட்டை சதத்தை தவறவிட்டிருந்தாலும், அவரது நாக் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றது, ஆஸ்திரேலியா மண்ணில் அவர் ஆடிய அந்த ஆட்டம் தான் அச்சமற்ற தொடக்க வீரர் என்ற அவரது நற்பெயரை மேலும் வலுப்படுத்தியது.
2007 பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் 19 வயதேயான ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர், பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை அடித்து நொறுக்கிய ரிக்கி பாண்டிங்கை திணறடித்தார்.
19 வயதில் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய இஷாந்த் ஷர்மா, WACA மைதானத்தில் மறக்க முடியாத ஸ்பெல்களில் ஒன்றை உருவாக்கினார். ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்கை வேகம், பவுன்ஸ் மற்றும் இடைவிடாத கூர்மையான டெலிவரிகள் மூலம் தொடர்ந்து துன்புறுத்தினார் மற்றும் இறுதியில் இரண்டு இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய கேப்டனை வெளியேற்றினார். இந்த அனல் பறக்கும் ஆட்டம் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற உதவியது மட்டுமல்லாமல் இஷாந்தின் வாழ்க்கைப் பாதையையும் மாற்றியது. அதற்குபிறகு நீண்ட காலத்திற்கு இந்தியாவின் நம்பிக்கை பந்துவீச்சாளராக டெஸ்ட் வடிவத்தில் இஷாந்த் ஷர்மா ஜொலித்தார்.
ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியை வெற்றிபெறுவதே கனவாக இருந்த இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வைத்தே வீழ்த்தி தொடரை வெல்ல முடியும் என்ற வரலாற்று சாதனையை படைக்க வழிகாட்டியவர் சட்டேஷ்வர் புஜாரா.
ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வரலாற்று முதல் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு புஜாரா தான் அடித்தளம். அந்த தொடர் முழுவதும் ஆஸ்திரேலியா பவுலர்களின் அத்தனை வியூகத்தையும் சுக்குநூறாக உடைத்து கெத்தாக பேட்டிங் செய்த புஜாரா, மூன்று சதங்களுடன் 74.42 சராசரியில் 521 ரன்கள் குவித்தார். அதுமட்டுமில்லாமல் அந்த தொடரில் மொத்தம் 1258 பந்துகளை எதிர்கொண்டார். புஜாராவின் மாரத்தான் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் தாக்குதலை மழுங்கடித்தது, பந்துவீச்சாளர்களை அதிகப்படியாக சோர்வாக்கி ஏமாற்றியது மற்றும் இந்தியாவை 2-1 என்ற வரலாற்று தொடர் வெற்றிக்கு அழைத்துச்சென்றது.
புஜாரா அந்த ஒருதொடரோடு முடித்துக்கொள்ளாமல் மீண்டும் 2020-21 சுற்றுப்பயணத்தின் போதும் இந்தியாவின் காப்பானாக செயல்பட்டார். மிடில் ஆர்டரில் தூணாக நின்று விளையாடிய அவரைச்சுற்றியே இந்திய அணி வெற்றியை கட்டமைத்தது. முதல் போட்டியில் 36-க்கு ஆல் அவுட்டான இந்தியாவை, இரண்டாவது போட்டியில் வெற்றிபெறவைத்து தொடரை 1-1 என உயிர்ப்புடன் மாற்றினார். அதற்காக அவர் உடல் முழுவதும் பல அடிகளை பரிசாக வாங்கினார். ஆஸ்திரேலிய பவுலர்கள் பாரபட்சமில்லாமல் பந்தை வீசினார். அத்தனைக்கும் அசராத புஜாரா இந்தியாவை மீண்டும் தொடர் வெற்றிக்கு அழைத்துச்சென்று மகுடம் சூடினார்.
ஒட்டுமொத்தமாக, நம்பர். 3 பேட்ஸ்மேனாக விளையாடிய அவர், மூன்று BGT சுற்றுப்பயணங்களில் 11 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 2657 பந்துகளை எதிர்கொண்டு 993 ரன்கள் எடுத்துள்ளார்!
2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், அடிலெய்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை (116) அடித்த விராட் கோலி இளம் வீரராக அசத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இது அவரது துணிச்சலையும் உறுதியையும் வெளிப்படுத்திய ஒரு அற்புதமான நாக்காக அமைந்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, 54.08 சராசரியில் ஆறு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் உட்பட 1352 ரன்கள் எடுத்துள்ளார்.
முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரிஷப் பண்ட், சிட்னி மைதானத்தில் ஒரு அற்புதமான 159* ரன்கள் சதத்துடன் 350 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2020-21 BGT தொடரில் பங்கேற்ற ரிஷப் பண்ட், கப்பாவில் ஒரு தலைசிறந்த ஆட்டத்தை விளையாடி ஆஸ்திரேலியாவின் அசைக்கவே முடியாத நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தார். சிட்னியில் நடைபெற்ற போட்டியில் அவருடைய 97 ரன்கள், நாக் டெஸ்ட் போட்டியை காப்பாற்றியது மட்டுமில்லாமல், தொடரின் வெற்றியை உறுதிசெய்யும் கப்பா மைதானத்தில் நடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் அடித்து இந்தியாவை வரலாற்று தொடர் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 1988 முதல் கப்பா மைதானத்தில் தோற்காத ஆஸ்திரேலியா, ரிஷப் பண்ட்டின் அசாத்தியமான ஆட்டத்தால் சாதனையை முடித்துக் கொண்டது.
காயங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தன் தந்தையை இழந்த தனிப்பட்ட சோகத்துடன் போராடினாலும், பிரிஸ்பேனில் ஐந்து விக்கெட்டுகள் (5/73) உட்பட மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் வெற்றிக்கு முக்கியமான பங்காற்றினார்.
அதே தொடரில் பங்கேற்ற சுப்மன் கில், தனது முதல் BGT தொடரிலேயே 51.80 சராசரியில் 259 ரன்கள் எடுத்தார். கப்பா வெற்றிக்காக பலர் ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை நினைவுகூர்ந்தாலும், இன்னிங்ஸைத் தொடங்கும் போது கில் 91 ரன்கள் அடித்தது பண்ட்டின் ஆட்டத்திற்கு சமமான முக்கியத்துவம் பெற்றது.
இந்தமுறை ஆட்டத்தை மாற்றும் வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இருப்பார்கள் என ஆஸ்திரேலியா ஊடகங்கள் தங்களுடைய செய்திகளில் குறிப்பிட்டுள்ளன.