”நடப்பாண்டு நான் நடத்தும் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமில் சென்னை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திட்டத்தை அமைச்சர் உதயநிதி துவங்கி வைக்க உள்ளார்” என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தி வரும் 22 yards மற்றும் gen next நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதன் விவரம்:
”வெளிநாடுகளில் ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாட நினைத்தால் அங்கு இருக்கும் அந்த வசதிகள் இந்தியாவில் நம்முடைய கிடைக்கிறதா என்றால் அது இல்லை. நகர்ப்புறத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட வருபவர்கள் குறைந்துள்ளது. கிராமப்புறத்தில் இருந்து அதிக அளவில் விளையாட வருகிறார்கள்.
விளையாடுவதற்கு தற்போது இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. கிராமப்புறத்தில் இருந்து குழந்தைகள் வர என்னால் முடிந்த அளவிற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாங்கள் முன்னெடுப்பது மட்டுமின்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமப்புறங்களில் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி வழங்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்களும் மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்னையில் போதிய மைதான வசதி இல்லை. இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் முறையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் முறையிடுவேன்” எனத் தெரிவித்தார்.
அப்போது, செய்தியாளர்கள் தரப்பில் ஆன்லைன் ரம்மி குறித்து அஸ்வினிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
தொடக்கத்தில், “ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டு இருந்தால் அதை விளையாடாதீர்கள். நான் அதை விளையாடவில்லை” என்று சுருக்கமாக பதில் அளித்தார். அதற்கு, செய்தியாளர்கள் தரப்பில், ’ஆன்லைன் ரம்மி போல தற்போது கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டும் உள்ளதே’ என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அஸ்வின், ’உங்களுக்கான தலைப்பு செய்தி கிடைக்கும் கேள்விகள் மட்டும் கேட்க கூடாது; பிரச்சனைக்கு எது துவக்க புள்ளியோ அதனை பார்க்க வேண்டும். தொலைபேசி பயன்படுத்துவதால் இளைஞர்கள் மைதானத்திற்கு வரவில்லை என நீங்கள் பிரசாரம் செய்தால் அதற்கு நான் வருவேன். கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை அது game of skill என்றுதான் கூறுகின்றனர். தடை செய்தால் விளையாடாதீர்கள்” என கூறினார்.