இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்த நிலையில் வரும் 17-ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளதால் முதல் போட்டியில் மட்டுமே விளையாடிவிட்டு இந்தியா திரும்ப உள்ளார் அவர். இந்நிலையில் எஞ்சிய மூன்று போட்டிகளில் இந்திய அணியில் கோலி விட்டுச் செல்லும் வெற்றிடம் தங்களுக்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை என சொல்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
“கோலி மாதிரியான அனுபவ வீரர் பேட்டிங் லைன் அப்பில் இல்லாதது இந்தியாவிற்கு பாதகம் தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் பதினோரு பேரும் சேர்ந்து விளையாடுவது தான் கிரிக்கெட்… தனியொரு வீரரை சார்ந்து ஒரு அணி இருக்க முடியாது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் அவர் விட்டு செல்லும் வெற்றிடத்தை நிரப்ப திறம்படைத்த இளம் வீரர்கள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதே போல இந்திய அணியில் பந்துவீச்சு பலமாக இருப்பதாக தெரிகிறது. வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இந்தியா அனைத்திலும் ஸ்ட்ராங்காக உள்ளது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு பவுலிங் மூலமாகவும் நாம் சவால் கொடுப்போம்” என தெரிவித்துள்ளார் அவர்.
கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றதும் குறிப்பிடத்தக்கது.