இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி, தன் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.50,000 தொகையை ஜீவனாம்சமாகத் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் முகம்மது ஷமி. சமீபத்தில் நிறைவுற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த ஷமி, முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்று விக்கெட்களை அறுவடை செய்ததுடன், வெற்றிக்கும் வித்திட்டார். அப்போது பந்துவீச்சு குறித்து சகவீரரான உம்ரான் மாலிக்கிற்கும் ஆலோசனை கூறியிருந்தார்.
இந்த நிலையில், முகம்மது ஷமியின் மனைவியான ஹசின் ஜகான், அவர் மீது பல்வேறு புகார்களைக் கூறியிருந்தார். இந்த புகார்கள் அனைத்திற்கும் ஷமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு முகமது ஷமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அப்போது, ஷமியின் பிரிந்த மனைவியான ஹசின் ஜகான், கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்தில் தன்னுடைய சொந்த செலவுக்காக ரூ.7 லட்சமும், மகளின் பராமரிப்புக்காக ரூ.3 லட்சமுமாக மொத்தம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் எனக் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் முகமது ஷமி, பிரிந்த மனைவியான ஹசின் ஜகானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000த்தை ஹசின் ஜகானின் தனிப்பட்ட செலவுக்கும், மீதமுள்ள ரூ.80,000த்தை அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவுக்கும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தத் தொகையை ஒவ்வொரு மாதம் 10ஆம் தேதிக்குள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தனது மகளுக்காக மாதந்தோறும் ரூ.80 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுத்து வருகிறார். 2020-21ஆம் ஆண்டில் ஷமியின் வருமானவரிக் கணக்கின்படி, அந்த ஆண்டில் அவரது ஆண்டு வருமானம் ரூ.7 கோடிக்கு மேல் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் மாதாந்திர ஜீவனாம்ச கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் மிருகங்கா மிஸ்திரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.