31 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பால்க்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போல பாகிஸ்தான் நாட்டின் இந்த PSL கிரிக்கெட் லீக் மிகவும் பிரபலம். இதில் ஐபிஎல் போலவே சர்வதேச வீரர்கள், பாகிஸ்தான் நாட்டு வீரர்களுடன் கலந்து கட்டி விளையாடுவார்கள்.
நடப்பு சீசனில் பால்க்னர், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் (Quetta Gladiators) அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி தனக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வரும் காரணத்தால் அவர் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். “இந்த சீசனின் தொடக்கம் முதல் விளையாடி வரும் எனக்கு சீசனுக்கான தொகையை ‘விரைவில் தனது விடுகிறோம்’ என பொய் சொல்லி வந்தனர். அதோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை அவமானகரமாக நடத்தி வந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் லாகூர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்த பால்க்னர், அழகுக்காக தொங்கவிடப்பட்டிருந்த அலங்கார விளக்கை அவரது ஹெல்மெட் மற்றும் பேட்டை எறிந்து சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் மார்ச் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.