காமன்வெல்த் போட்டி: தங்கப் பதக்கம் வென்று மீராபாய் சானு மிரட்டல் சாதனை!

காமன்வெல்த் போட்டி: தங்கப் பதக்கம் வென்று மீராபாய் சானு மிரட்டல் சாதனை!
காமன்வெல்த் போட்டி: தங்கப் பதக்கம் வென்று மீராபாய் சானு மிரட்டல் சாதனை!
Published on

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஒட்டுமொத்தமாக 201 கிலோ (ஸ்நாட்ச் பிரிவில் 88+ க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு. இதனால் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்கார், வெண்கலம் வென்ற குருராஜாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்காக 3வது பதக்கத்தை வென்ற வீரராக உருவெடுத்தார் மீராபாய். மேலும் நடப்பு தொடரில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் வீராங்கனையும் மீராபாய்தான்!

ஸ்நாட்ச் பிரிவு பளுதூக்குதலில் உலகின் பல வீராங்கனைகள் 70-80 கிலோ வரையிலான எடையை தூக்கி கொண்டிருக்க, முதல் முயற்சியிலேயே 84 கிலோ எடையை தூக்கி அரங்கை அதிர வைத்தார் மீராபாய். 2வது முயற்சியில் 88 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தினார். 3வது முயற்சியில் 90 கிலோவை தூக்க முயன்றபோது அது முடியாமல் அவரது இன்றைய ஸ்நாட்ச் பிரிவு அதிகபட்சம் 88 கிலோவுடன் நின்றது. 2வது இடத்தில் இருந்த மொரீஷியஸ் வீராங்கனை மேரி ஹனித்ரா 76 கிலோ எடையைத் தான் தூக்கியிருந்தார். இதனால் 12 கிலோ முன்னிலையுடன் தங்கப்பதக்கம் நோக்கி பயணித்தார் மீராபாய்.

க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் மற்ற வீராங்கனைகள் 90 கிலோவை தூக்க முயற்சிக்க, 113 கிலோவை தூக்கி வீசும் முயற்சியில் இறங்கினார் மீராபாய் சானு. 3 முயற்சிகளின் முடிவில் 113 கிலோ எடையை தூக்கி மலைக்க வைத்தார். ஒட்டுமொத்தமாக 201 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் தங்க மங்கையாக ஜொலித்தார் மீராபாய். 2வது இடத்தில் வெள்ளி வென்ற மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ஹனித்ரா ஒட்டுமொத்தமாக 172 கிலோ எடையை தூக்கியிருந்தார். 29 கிலோ வித்தியாசத்தில் முன்னிலை பெற்று தங்கத்தை தனதாக்கினார் மீராபாய்.

யார் இந்த மீராபாய் சானு?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர்தான் மீராபாய் சானு. அம்மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று சாய்கோம் கிரிடி மீடியுடையது. அவரது கடைசி பெண் குழந்தைதான் மீராபாய் சானு. அவரது அம்மா பெட்டிக்கடை நடத்தி வந்தார். வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் காட்டில் மீராபாய் சானுவும் அவரது சகோதரரும் விறகுக் கட்டைகளைச் சுமந்து வருவர். சகோதரனை விட அதிக விறகுக் கட்டைகளை சுமந்து வருவார் மீராபாய் சானு. பளுதூக்குதலுக்கு இது ஒரு முதல் அனுபவமாக அவருக்கு அமைந்துள்ளது.

மீராபாய் சானு பேட்டி ஒன்றில் “நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் உள்ளபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது” என்று கூறியிருந்தார்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் ஏமாற்றத்தை சந்தித்த மீராபாய், 2020-21 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். தன் வாழ்வில் சந்தித்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிய மீராபாய், இன்று பல சாதனைகளை படைத்ததோடு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com