போட்டி 31: வங்கதேசம் vs பாகிஸ்தான்
முடிவு: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (வங்கதேசம் - 204 ஆல் அவுட், 45.1 ஓவர்கள்; பாகிஸ்தான் - 205/3, 32.3 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ஃபகர் ஜமான் (பாகிஸ்தான்)
பேட்டிங்: 74 பந்துகளில் 81 ரன்கள் (3 ஃபோர்கள், 7 சிக்ஸர்கள்)
இந்த உலகக் கோப்பையில் பல சூப்பர் பெர்ஃபாமன்ஸ்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமீபமாக சிலபல கம்பேக் பெர்ஃபாமன்ஸ்களும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள், பிளேயிங் லெவனில் இடத்தை இழந்து மீண்டும் வாய்ப்பு பெற்ற வீரர்கள், தங்களின் வாய்ப்புகளை சரியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, முதல் நான்கு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காத இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, இரண்டு போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இலங்கை அணியில் இடத்தை இழந்த லஹிரு குமாரா, கூடுதல் ஸ்பின்னரால் ஆப்கானிஸ்தான் அணியில் தன் இடத்தை இழந்த ஃபசல்ஹக் ஃபரூக்கி போன்றவர்கள் தங்கள் கம்பேக் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றார்கள். அவர்கள் வரிசையில் ஃபகர் ஜமான் தன் கம்பேக் போட்டியில் ஒரு சூப்பர் இன்னிங்ஸ் ஆடி ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார்.
இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முதல் போட்டியில் ஆடினார் ஃபகர் ஜமான். நெதர்லாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஆசிய கோப்பை, உலகக் கோப்பை பயிற்சி போட்டி என தொடர்ந்து அவர் சொதப்பிக்கொண்டே இருந்ததால் அவர் மீதான நெருக்கடி அதிகரித்தது. இந்த ஃபார்ம் பிரச்னை, ஃபிட்னஸ் பிரச்னை எல்லாம் ஒன்று சேர, இரண்டாவது போட்டிக்கான பாகிஸ்தான் பிளேயிங் லெவனிலேயே அவருக்கு இடம் தரப்படவில்லை.
அவருக்குப் பதில் அப்துல்லா ஷஃபீக் ஓப்பனராக விளையாடினார். அப்துல்லா ஷஃபீக் நன்கு விளையாடி தன் இடத்தை உறுதி செய்து கொண்டிருந்தாலும், மற்றொரு ஓப்பனரான இமாம் உல் ஹக் சொதப்பத் தொடங்கினார். அதனால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் களம் கண்டார் ஜமான்.
205 என்பது எளிய இலக்கு தான். ஆனால் ஈடன் ஆடுகளம் பௌலர்களை கைவிடாத ஒன்று. அதனால் அந்த இன்னிங்ஸ் எலிதாக இருக்கும் என்று ஜமான் நினைத்துவிடவில்லை. மிகவும் கவனமாகவே வங்கதேச பௌலர்களை எதிர்கொண்டார். முதல் 11 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் அவர். விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆனால், நான்காவது ஓவர் முடிந்ததும் அப்படியே தன் ஆட்டத்தை மாற்றினார் ஜமான்.
டஸ்கின் அஹமது விசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தவர், ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எட்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒன்பதாவது மற்றும் பத்தாவது ஓவர்களில் தலா 1 ஃபோர், 12வது, 14வது ஓவர்களில் தலா 1 சிக்ஸர் என அடித்து நொறுக்கினார். அதனால் பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. வங்கதேச பௌலர்கள் கடும் நெருக்கடிக்குள்ளானார்கள். 18வது ஓவரில் டஸ்கின் அஹமது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அரைசதத்தை (51 பந்துகளில்) பூர்த்தி செய்தார் ஜமான்.
அரைசதம் கடந்த பிறகு நான்கு ஓவர்கள் ஸ்டிரைக் ரொடேட் செய்வதில் கவனம் செலுத்தினார். அதன்பிறகு மீண்டும் அதிரடி மோடுக்கு மாறி பௌண்டரிகளாக விளாசினார். இப்படி ஒவ்வொரு கட்டமாகப் பிரித்து தன் ஆட்டத்தை அதற்கேற்ப மாற்றிக்கொண்டார் அவர். சதமடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் அவர்.
சற்று கடினமான ஆடுகளத்தில் பெரிய இன்னிங்ஸ் ஆடியதோடு மட்டுமல்லாமல், அப்துல்லா ஷஃபீக்குடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தார் அவர். இப்படி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் சேஸை எளிதாக்கியதால் ஆட்ட நாயகன் விருதும் வென்றார் ஃபகர் ஜமான்.
"கடந்த சில போட்டிகளில் ஆடாமல் இருந்த நிலையில், அந்த இடைவெளி நான் சிறப்பாக மீண்டுவர உதவியது. ஆசிய கோப்பை தொடருக்குப் பிறகு நான் அதீத பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். பயிற்சி முகாமின்போது மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். ஒரு பெரிய ஸ்கோர் அடிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இது கிரிக்கெட் ஆயிற்றே. நான் அப்துல்லா ஷஃபீக்கிடம் போட்டியின்போது பேசினேன். முதல் நான்கு ஓவர்களை கடத்தப்போகிறேன் என்றும், அதன்பிறகு ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிக்ஸர்களாக விளாச முயற்சி செய்யப்போவதாகவும் கூறியிருந்தேன். ஏனெனில் என்னால் அது முடியும் என்று நன்கு தெரியும்.
அதுமட்டுமல்லாமல் என்னுடைய ரோல் என்ன என்பதும் எனக்குத் தெரியும். நெட் ரன் ரேட்டும் என் மனதில் இருந்தது. அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்த பிறகு ஆட்டத்தை 30 ஓவர்களுக்குள் முடிக்கவேண்டும் என்று நினைத்தோம். தொடர் சொதப்பல்களுக்குப் பிறகு அந்த முதல் 30 ரன்களை கடக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். நிறையவே தடுமாறியிருந்தேன். இனி வரும் போட்டிகளில் பெரிய ஸ்கோர்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன்" - ஃபகர் ஜமான்.