ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற்ற வீரர்களே உலகக் கோப்பையிலும் விளையாடமாட்டர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தால் வெற்றிப் பெற்றது. எனினும் கடந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி அடைந்துள்ளது. அதிலும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 350 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிய அதே வீரர்கள் உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார்கள். ஏனென்றால் உலகக் கோப்பைக்கான அணி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தத் தொடரில் வீரர்கள் எவ்வாறு சவாலான நேரங்களில் விளையாடுகிறார்கள் என்று பார்த்தோம். மேலும் உலகக் கோப்பைக்கு முன் எங்களிடம் உள்ள அனைத்து வீரர்களையும் விளையாட வைத்து பார்த்துள்ளோம். அத்துடன் ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா அணிக்குக் கிடைத்துள்ள சிறிய பின்னடைவு உலகக் கோப்பைக்கு முன் ஒரு முக்கிய எச்சரிக்கையாக கருதுகிறேன்.
இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 75 ஆக உள்ளதால் நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனாலும் ஒரு சில இடங்களில் இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன்பு சரி செய்ய வேண்டும். அதில் நாங்கள் தீவரம் காட்ட தொடங்கியுள்ளோம். ரிஷ்ப் பந்த்தை தோனியுடன் ஒப்பிடுவது தவறு. தோனி ஒரு ஜாம்பாவன் ஆட்டக்காரர். எனவே அவருடன் ரிஷ்பை ஒப்பிடுவது சரியான ஒன்றல்ல. மேலும் விஜய் சங்கர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.