இந்திய கிரிக்கெட் அணியின் கோச் பிரச்னை, அணியை பாதிக்காது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. கும்ப்ளே, கோலி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியானதாக செய்திகள் வெளியாயின. கும்ப்ளே, ஹெட்மாஸ்டர் போல கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், வீரர்கள் தேர்வு விஷயத்தில் கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சினை நிலவுவதாகவும் கூறப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இன்று தொடங்கும் நிலையில் இவர்கள் பஞ்சாயத்து, அணிக்குள் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறும்போது, ‘கோச் தேர்வு விவகாரம் அணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் நாட்டுக்காக விளையாடும்போது ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. எதிர்பார்ப்பும் அதிகம். இது வீரர்களுக்கும் தெரியும் என்பதால் கோச் பிரச்சனை அணியில் பாதிப்பை ஏற்படுத்தாது’ என்றார்.