இந்திய அணியின் அட்டகாசமான 5 வீரர்களில் ஒருவராக இருந்தவர் விவிஎஸ் லக்ஷ்மன். டெஸ்ட் போட்டிகளில் பல முன்னணி அணிகளுக்கு லக்ஷமனின் ஆட்டம் சிம்ம சொப்பனமாக இருந்தது. அந்தக் காலத்தில் வீரியமான அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை அசால்டாக சமாளித்தவர் லக்ஷமன். ஆனால் அவரின் அந்திம காலங்களில் அவருக்கு மாற்றான வீரரை டெஸ்ட் அணியில் இணைக்க தேடிக்கொண்டிருந்த தேர்வாளர்களின் கண்களுக்கு தென்பட்டவர்தான் ரஹானே. இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை பல நேரங்களில் தூக்கிவிட்டு, இப்போது ஆலமர விருட்சமாய் வளர்ந்து நிற்கிறார் ரஹானே. அப்படிப்பட்ட ரஹானே இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இப்போது டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ள ரஹானே, முதலில் அறிமுகமாகியது டி20 போட்டியில்தான். 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் ரஹானே. இந்திய அணியில் தொடர்ந்து ரஹானே இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் "அவுட் ஆஃப்" பார்ம் மற்றும் டி20 அணியில் இடம் பெற கடுமையான போட்டி இருந்ததால் இந்தியாவுக்காக 20 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் ரஹானே. பின்பு ஒருநாள் அணிக்காக 90 போட்டிகளில் விளையாடியும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை ரஹானேவுக்கு.
இத்தனைக்கும் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள், 24 சதங்கள் என ஆவரேஜ் 35.26 என அசத்தலாக இருந்தும் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியவில்லை. ஆனாலும் துவண்டு போகாத ரஹானே தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருந்தார். ஆனால் எப்போதும் ரஹானேவின் திறமை மீது தேர்வாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஏனென்றால் ரஹானேவின் ஆட்டத்திறன் அப்படிப்பட்டது. ரஹானேவின் ஆட்டத்தை பார்க்கும் முன்னாள் வீரர்கள் பலரும் அவரை "கிளாசிக் ரஹானே" என புகழ்வார்கள். அத்தனை நேர்த்தியான ஷாட்டுகள் ரஹானேவின் ஆட்டத்தில் இருக்கும்.
விவிஎஸ் லக்ஷமன் 2012 இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றார். அப்போது அவரின் இடத்தை நிரப்ப சரியான நபரை தேடிக்கொண்டிருந்த தேர்வாளர்கள் கண்ணில் பட்டார் ரஹானே. இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7, இரண்டாவது இன்னிஸில் 1 ரன்னுமே எடுத்தார் ரஹானே. பின்பு அதே ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட்டில் இக்கட்டான சூழலில் டெயில் என்டர்களுடன் இணைந்து 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
இதனால் ரஹானே மீதான நம்பிக்கை அதிகரித்தது. பின்பு நியூசிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பிடித்த ரஹானே முதல் சதமடித்தார். பின்பு அடுத்தடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீல், இலங்கை என அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சதமடித்தவர் ரஹானே. ஏன் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரிலும் சதமடித்து அசத்தினார் ரஹானே. மிக முக்கியமாக கோலி இல்லாத சூழலில் அணிக்கு தலைமை தாங்கிய 3 டெஸ்ட் போட்டிகளில் 1 டிரா, 2 வெற்றி என கேப்டனாகவும் புருவங்களை உயர்த்தினார் ரஹானே. அதுவும் அனுபவமில்லா வீரர்களை வைத்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினார்.
ரஹானே 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4583 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 12 சதங்கள் 23 அரை சதம் என இருக்கிறது. இந்தியாவின் கேப்டன் பொறுப்பு பிரித்து அளிக்கும் நிலை ஏற்பட்டால் இந்திய டெஸ்ட் அணிக்கு நிச்சயம் ரஹானே கேப்டனாவார் என்று பலரும் கணிக்கின்றனர். ரஹானேவின் பேட்டிங் எப்படி எளிமையானதோ, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஹானே அப்படிதான். கேப்டன் பொறுப்பில் இருந்தாலும் ஆக்ரோஷம் இல்லாமல் சாதிப்பதே ரஹானேவின் ஸ்டைல். இதோ நெருங்குகிறது நியூசிலாந்துடனான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. ஒருவேளை இதில் இந்தியா வெற்றிப்பெற்றால் அதில் ரஹானேவின் பங்கு நிச்சயம் இருக்கும் என நம்பலாம்.
- ஆர்.ஜி.ஜெகதீஷ்