இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டது.
51 வயதான கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவரை சிட்னிக்கு இடம் மாற்றி சிகிச்சை கொடுக்கவும் முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிட்னி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ் கெய்ன்ஸ் உயிர்காக்கும் கருவிகளிலிருந்து விடுதலை பெற்றார் என்றும் உடல் நிலை தேறி தன் குடும்பத்தினருடம் கெய்ன்ஸ் பேசினார் என்று கூறியுள்ளது. இதனையடுத்து கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளிலும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணணையாளராக இருக்கிறார் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.