“வவ்வால், பூனையெல்லாமா சாப்பிடுறது.. ஒரு வரைமுறை இல்லையா” சீனா மீது அக்தர் கொந்தளிப்பு
சீனர்களின் உணவுப் பழக்கமே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.
இதுவரை 145 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் 5,436 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 72 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக கொரோனா வைரஸ் முதலில் பரவிய சீனாவில் 3 ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் ஆயிரத்து 266 பேரும், ஈரானில் 514 பேரும் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஷோயப் அக்தர் சீனர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், "எனக்கு ஒன்று புரியவில்லை நீங்கள் ஏன் வவ்வால், அதன் ரத்தம், சிறுநீர் இதையெல்லாம் சாப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. இதனால் ஒரு கொடூரமான வைரஸை உலகெங்கும் பரப்பி இருக்கிறார்கள் சீனர்கள். இவர்களால் இப்போது உலகமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. இப்போதும், ஏன் நீங்கள் வவ்வால், நாய், பூனைகளை சாப்பிடுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நான் கடுமையான கோபத்தில் இருக்கிறேன்" என்று காட்டமாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த ஷோயப் அக்தர், "உலகமே ஆபத்தில் இருக்கிறது. சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் உலமே முடங்கி இருக்கிறது" என்றார். இதனையடுத்து சற்றே சுதாரித்த அக்தர், "நான் சீன மக்களுக்கு எதிரானவன் அல்ல. விலங்குகளுக்கு ஆதரவாக பேசுகிறேன். இவற்றையெல்லாம் உண்பது உங்களது கலாசாரமாக இருக்கலாம், ஆனால் இப்போது இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏன் என்றால் இவை இப்போது மனிதர்கள் கொல்கிறது. அனைத்தையும் சாப்பிடக்கூடாது, எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது என்பதே என் வாதம்" என தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் டி20 தொடரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அக்தர், "என்னுடைய கோபத்துக்கான காரணம் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதான். பல ஆண்டுகளுக்கு பிறகு பிஎஸ்எல் தொடர் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது. இப்போது அதுவும் ஆபத்தில் இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் எல்லாம் சொந்த நாடுகளுக்கு திரும்புகிறார்கள். இப்போது போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறுகிறது" என்றார்.