உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: சாதனை படைத்த தமிழக வீரர்!
உலகக் கோப்பை செஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் (Fabiano Caruana) மோதினார். நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலின்போது டிராவில் முடித்தார். இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. அரை இறுதிச் சுற்றின் 2வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 47வது காய் நகர்த்தலின்போது ஆட்டத்தை டிரா செய்தார்.
இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்த நிலையில், இன்று நடைபெற்ற டை பிரேக்கரில் 3.5 - 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு பிறகு இரண்டாவது இந்தியராக பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அசர்பைசான் தலைநகர் பகுவில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகின் முதல்நிலை வீரரும் முன்னாள் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார்.