செஸ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ள பிரக்ஞானந்தா தற்போதுதான் 12ஆம் வகுப்பைப் படித்து முடித்துள்ளார். தன்னுடைய அக்கா செஸ் விளையாடிய காரணத்தால் வீட்டிலேயே 3 வயது முதல் செஸ் விளையாட அவர் தொடங்கியிருக்கிறார். இருந்தாலும் அவருக்கான பயிற்சி என்பது அவர் படித்த பள்ளியில் இருந்தும் கிடைத்துள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் கல்வியை தவிர, மாணவர்களிடம் உள்ள மற்ற திறன்களைக் கண்டறிய நடத்தப்படும் வகுப்புகள் நேரத்தில் பிரக்ஞானந்தா நன்றாக செஸ் விளையாடிய காரணத்தால் அந்தப் பள்ளியில் செஸ் பயிற்சியாளராக இருக்கக்கூடிய வேலவன் மூலம் 6 வயது முதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் பிரக்ஞானந்தா 6 வயதிலே செஸ் விளையாட துவங்கிவிட்டார். அப்போதே 12 வயது மாணவர்களுடன் செஸ் குறித்துப் பேசி தெளிவு பெற்றுவந்துள்ளார்.
பிரக்ஞானந்தா இந்த அளவிற்கு முன்னேறக் காரணம் அவரின் விடாமுயற்சிதான். பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் உறுதுணை மற்றும் பள்ளியில் அவருக்கு வழங்கப்பட்ட சலுகை ஆகியவை அவரை மேலும் உத்வேகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரக்யானந்தாவின் ஆசிரியை சித்ரா டேனியல், “பிரக்ஞானந்தா செஸ் பயிற்சியில் சேர்த்துவிட வேண்டும் என கூறிய காலத்தில், நான்தான் அவருக்கு ஆசிரியை. வகுப்பில் மிகவும் அமைதியான மாணவர். நாம் கேள்வி கேட்டால், அதற்கு மட்டுமே பேசக்கூடியவர். ஆனால் தற்போது அவரிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்பு மூலம் கிடைத்த தன்னம்பிக்கை காரணமாக ஒரு INTROVERT ஆக இருந்த பிரக்ஞானந்தா, இன்று EXTROVERT ஆக மாறியுள்ளார். நிறைய நல்ல மாற்றங்கள் அவரிடம் ஏற்பட்டுள்ளன. பிரக்ஞானந்தா ஒவ்வொரு முறை புதிய சாதனை செய்யும்போதும் எனக்கு நிறைய மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது” என்றார்.
மற்றொரு ஆசிரியையான நளினி, “சர்வதேச வீரராக பிரக்ஞானந்தா மாறியபின் பள்ளிக்கு எப்போதாவது மட்டுமே வருவார். பெரும்பாலான நேரங்கள் ODதான். ஒவ்வொரு பாடத்திலும் எந்தப் பகுதி கடினமாக உள்ளதோ, அதை மட்டும் ஆசிரியர்கள் அவருக்குத் தனியாகப் பாடம் எடுப்பார்கள். மற்றபடி தேர்வுக்குத் தயாராகும் வகையில் அவருக்கு தனியாகக் குறிப்புகள் வைத்து அவர் தேர்வுகளை எதிர்கொள்வார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்றாலும் தேர்வுகளைத் தவிர்க்க மாட்டார்” என்கிறார்.
வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் இல்லாமல் சிறு வயது முதல் பல கடினங்களை கடந்தது காரணமாகவே இன்று பிரக்ஞானந்தா உலகின் முன்னணி செஸ் வீரராக மாறியுள்ளார்.