செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுவது இன்ப அதிர்ச்சியாக இருப்பதாக இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் ஸ்டாலின் நடத்திய கலந்துரையாடலில் செஸ் ஒலிம்பியாட் குறித்த பல அம்சங்களை பகிர்ந்துள்ளார்.
“செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். இம்முறை சென்னையில் நடைபெறுவதால் எனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. சென்னையில் போட்டி நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் போட்டி நடைபெறுவது எனக்கு இன்ப அதிர்ச்சிதான். வாய்ப்பு கிடைத்ததும் உடனடியாக தயாரான தமிழ்நாடு அரசுக்கு நிச்சயம் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
நமது வீரர்கள் போட்டிக்கு தயாராக உள்ளனர். அவர்கள் கிராண்ட்மாஸ்டர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளனர். நமது கிராண்ட்மாஸ்டர்கள் பலமானவர்கள் என்றே சொல்லலாம். இம்முறை சென்னையில் போட்டி நடப்பதால் நம் வீரர்களுக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும். நமது இரு அணிகளும் பதக்கத்தை வெல்ல தகுதியானவை. கண்டிப்பாக ஒரு பதக்கமாவது கிடைக்கும் என நம்புகிறேன்.
நமது சென்னையிலேயே போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகரிக்கும். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதால் பல வீரர்கள் எதிர்காலத்தில் உருவெடுப்பார்கள் என நம்புகிறேன். இந்தியாவில் செஸ் விளையாட்டிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை செஸ் ஒலிம்பியாட் அளிக்க போகிறது.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.