சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 175 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கி டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகர் தவார் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்துவிட்டு வெளியேற, பிருத்வி ஷா அரைசதம் அடித்துவிட்டு 64 (43) ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்ரேயாஸ் 26 (22) ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, இறுதிவரை விளையாடிய பண்ட் 37 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 175 ரன்களை குவித்தது. சென்னை அணியில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 19வது ஓவரில் சாம் குரான் வீசிய கடைசி பந்தில் தோனி பாய்ந்து பிடித்த கேட்ச் ரசிகர்களை கவர்ந்தது. இதுதவிர பிருத்வி ஷாவின் ஸ்டம்பிங் அவுட்டையும் தோனி எடுத்திருந்தார்.