சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று போட்டிகளில் பங்குபெற்று விளையாடிய இந்திய வீராங்கனைகள் 5 பேரும் படுதோல்வியை தழுவி உள்ளனர்.
தகுதி சுற்றில் வெற்றிபெற்று சென்னை ஓபன் தொடரில் விளையாட வேண்டும் என்ற இந்திய வீராங்கனைகளின் கனவு தகுதி சுற்றின் முதல் நாளிலேயே கலைந்துள்ளது.
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஓபன் தொடரின் துவக்க போட்டிகள் 12ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், சென்னை ஓபன் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று துவங்கின. போட்டியில் தமிழக வீராங்கனைகள் லட்சுமி பிரபா, சாய் சம்ஹிதா உள்ளிட்ட 5 இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தகுதி சுற்று போட்டிகளில், முதல் போட்டியில் தமிழக வீராங்கனை சாய் சம்ஹிதா ஜப்பான் வீராங்கனை நோவா ஹிபினோவை எதிர்கொண்டு விளையாடினார். துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய நோவா ஹிபினோ 6-1 ,6-0 என்ற புள்ளி கணக்கில் சாய் சம்ஹிதாவை எளிதாக வீழ்த்தினார். மற்றொரு தகுதி சுற்று போட்டியில் விளையாடிய தமிழக வீராங்கனை லட்சுமி பிரபா, ஜப்பான் வீராங்கனை நைடோவிற்கு எதிரான போட்டியில் 6-4,6-1 என்ற புள்ளி கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
மேலும் மற்ற தகுதி சுற்று போட்டிகளில் விளையாடிய இந்திய வீராங்கனை ரியா பாட்டியா 6-4,6-0 என்ற புள்ளி கணக்கில் லித்துனியா வீராங்கனை ஜஸ்டினா மிக்குல்கைடேவிற்கு எதிராகவும், ருத்துஜா போஷாலே 6-3,6-2 என்ற புள்ளி கணக்கில் தாய்வாங் வீராங்கனை லியாங் என்.ஷோவிற்கு எதிராகவும், சவுஜனிய பவிசேட்டி 6-4,6-0 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீராங்கனை ஓக்காமுராவிற்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறினர்.
இந்நிலையில் சென்னை டென்னிஸ் ஓபன் தொடரில் இந்திய வீராங்கனைகளின் பயணம் தொடங்குவதற்குள்ளாகவே கலைந்துள்ளது.