சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து கேப்டன் விராத் கோலி சூசகமாக பதிலளித்துள்ளார்.
போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ய அவசியமில்லை என்றே நான் கருதுகிறேன் என்று அவர் தெரிவித்தார். அரையிறுதிப் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததால் விமர்சனத்துக்கு உள்ளான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கோலி, ஹர்திக் போன்ற வீரர்களின் இருப்பு அணிக்கு எப்போதுமே பலத்தையே அளிக்கும் என்று தெரிவித்தார். மிகப்பெரிய இலக்கினை சேசிங் செய்யும்போது ஒரு ஓவருக்கு 8 ரன்கள் தேவை என்ற சூழலில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஹர்திக் பாண்ட்யா போன்றோர் அணிக்குத் தேவையான ரன்களை விரைவில் குவிப்பதில் முக்கிய பங்காற்றுவர் என்றும் கோலி தெரிவித்தார். வரலாறு குறித்து பேசுவதில் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், போட்டி நடைபெறும் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் தெரிவித்தார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி நாளை நடைபெறுகிறது.