சதத்திலேயே சதமடித்த சச்சின்! மறக்க முடியாத வரலாற்று சாதனை நிகழ்ந்த நாள்

சதத்திலேயே சதமடித்த சச்சின்! மறக்க முடியாத வரலாற்று சாதனை நிகழ்ந்த நாள்
சதத்திலேயே சதமடித்த சச்சின்! மறக்க முடியாத வரலாற்று சாதனை நிகழ்ந்த நாள்
Published on

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100 ஆவது சதத்தை எட்டி சாதனைப்படைத்தார். இந்தப் போட்டிக்கு முன்பு சச்சின் எத்தனையோ சதங்களை விளாசியிருந்தாலும் தனது 100 ஆவது சதத்தை அடிக்க அவர் மட்டும் காத்திருக்கவில்லை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அந்த மகத்தான சாதனையை காண ஆர்வமாக இருந்தனர்.

இந்த எதிர்பார்ப்போ என்னவோ தெரியவில்லை 99 சதத்திலிருந்து 100 ஆவது சதத்தை எட்டுவதற்கு சச்சின் 33 போட்டிகளை எடுத்துக்கொண்டார். அதில் பல போட்டிகளில் 90 ரன்களில் இருந்து 100 ரன் எட்டுவதற்குள்ளாக அவுட்டானார் சச்சின் டெண்டுல்கர். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் சச்சின் எப்போது 100 ஆவது சதத்தை அடிப்பார் என வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்வு சச்சினுக்கு இதே நாளில் 9 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்தது.

காத்திருப்பு ஒன்றும் சச்சினுக்கு புதிததல்ல.1989 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சச்சின் டெண்டுல்கர், தனது முதல் சதத்தை எடுக்க ஓராண்டுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. 1990 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அந்நாட்டுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார் சச்சின் டெண்டுல்கர். அதன் பின்பு சச்சின் டெண்டுல்கருக்கும் அவர் அடிக்கும் சதத்துக்கும் ஓய்வே இல்லை. டெஸ்ட், ஒருநாள் என இருவிதமான போட்டிகளிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்தான் "மாஸ்டர் தி பிளாஸ்டர்".

அதேபோல 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின்புதான் 1994-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்தார். அதன் பின்பு ஓய்வின்றி உழைத்த இந்த ரன் மெஷின் ஒருநாள் போட்டிகளில் இருந்து 2012 ஆம் ஆண்டும் டெஸ்ட் போட்டியில் இருந்து 2013 ஆம் ஆண்டிலும் ஓய்வுப்பெற்றார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும் அடித்த சாதனையாளர் சச்சின். அதேபோல் 200 டெஸ்ட்களில் 15921 ரன்களும், ஒருநாள் போட்டிகளிலும் 18426 ரன்களும் எடுத்திருக்கிறார். இதுவரை சச்சினின் இந்தச் சாதனையை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் முறியடிக்கவில்லை.

தனது 100 ஆவது சதம் குறித்து பேசிய சச்சின் " முதல் சதத்திற்கும் 100வது சதத்திற்கும் என்ன வித்தியாசம் என்று என்னிடம் கேட்கிறார்கள். முதல் சதமடிக்கும்போது, இன்னும் 99 சதங்கள் அடிப்பேன் என்று தெரியாது. நான் 99 சதங்களுடன் தேங்கிய சமயத்தில், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று, நான் ஏற்கெனவே 99 சதங்கள் அடித்தவன் என்பதையும் மறந்து ஏராளமானோர் ஏராளமான அறிவுரைகளை வழங்கினார்கள். இதுதான் முதல் சதத்திற்கும் 100வது சதத்திற்குமான வித்தியாசம்" என நகைச்சுவையாக கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com