19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. அங்குள்ள பல்வேறு நகரங்களில், 61 பிரிவுகளில் 40 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்றனர். இந்த முறை, எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்தனர். இதன்மூலம் இந்தியா, பதக்க வேட்டையிலும் சாதனை படைத்தது.
அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவாக 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்ளை வேட்டையாடி வந்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்குமுன்னர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா அதிகபட்சமாக 70 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. இதையடுத்து இவ்வருடம் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
பிரதமர் மோடிகூட, ‘நமது வியக்கத்தக்க விளையாட்டு வீரர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம், கடின உழைப்பு ஆகியவை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களது வெற்றிகள், நாம் நினைவில்கொள்ள வேண்டிய தருணங்களையும், நம் அனைவருக்கும் உத்வேகத்தையும் அளித்துள்ளதுடன், மேலும் சிறந்த செயல்பாட்டிற்கான நமது உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன’ எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவர்களுடன் கலந்துரையாடினார் பிரதமர்.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பதக்கத்தைக்கூட வெல்லாத குஜராத் மாநில விளையாட்டுத் துறைக்கு மத்திய அரசு அதிக நிதி (ரூ.608 கோடி) கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ஆசிய விளையாட்டில் மாநிலம் வாரியாக வென்ற வீரர், வீராங்கனைகளின் பதக்கப்பட்டியலும், அம்மாநில விளையாட்டுத் துறைகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதிப் பட்டியலும் தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா (44), பஞ்சாப் (32), மகாராஷ்டிரா (31), உத்தரப்பிரதேசம் (21), தமிழ்நாடு (17), மேற்கு வங்கம் (13), ராஜஸ்தான் (13), கேரளா (11), மத்தியப் பிரதேசம் (10), மணிப்பூர் (9), ஆந்திரப் பிரதேசம் (9), இமாச்சல் பிரதேசம் (7), தெலங்கானா (7), டெல்லி (7), கர்நாடகா (6), ஜார்க்கண்ட் (4), ஒடிசா (3), அசாம் (2), உத்தரகாண்ட் (2), மிசோரம் (1) ஆகிய மாநிலங்கள் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளன (அடைப்புக் குறிக்குள் இருப்பது பதக்கங்களின் எண்ணிக்கை).
இதில் பாஜக மாடலுக்குப் பெயர்போன குஜராத் மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் எந்தவொரு பதக்கத்தையும் ஆசிய விளையாட்டில் நாட்டுக்கு பெற்றுத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இன்னொரு விஷயம் என்னவெனில், குஜராத்துக்கு விளையாட்டுத்துறையில் Khelo India திட்டம் மூலம் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது!
ஒரு பதக்கம்கூட வெல்லாத குஜராத் மாநிலத்திற்கு மட்டும் விளையாட்டுத் துறைக்காக மத்திய அரசு ரூ.608.37 வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பதக்கமே பெறாத குஜராத் மாநில அரசுக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கீடு செய்தது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்தப் பட்டியலில் குஜராத் மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் ரூ.503.02 தொகையுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் உத்தரப்பிரதேசம்கூட, 21 பதக்கங்களை வேட்டையாடி உள்ளது.
பதக்க பட்டியலில் உ.பி.க்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு 17 பதக்கங்களைப் பெற்று வந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 5வது இடம்பிடித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்காக மத்திய அரசு வழங்கிய தொகை ரூ.33 கோடிதான். இந்த தொகையை வைத்துக்கொண்டே, தமிழ்நாடு இந்த அளவுக்கு விளையாட்டுத் துறையில் சிறப்பாக முன்னேறியிருப்பதை சுட்டிக்காட்டி பலரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் கூடுதல் நிதி கிடைத்திருந்தால் இன்னும்கூட தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சாதித்திருக்குமென்ற பார்வையும் உள்ளது.
இதையெல்லாம் குறிப்பிட்டு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துவருகிறது. ‘மத்திய அரசு அதிகளவில் கொட்டிக் கொடுத்த மாநிலங்கள் எல்லாம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை அள்ளி வந்திருக்கின்றனவா?’ என இணையவாசிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், மத்திய அரசின் இந்த ரூ.33 கோடி நிதி உதவியை வைத்துக்கொண்டுதான், தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகம் புகழும் வகையில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.