யாராவது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியுமா ? கடவுள் இங்கே இருக்கையில் அவரைவிட பெரியவர் யார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சச்சின் பிறந்தநாளையொட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை நடத்தியது. அதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கலந்துக் கொண்டார். அப்போது அவர் சச்சின் உடன் விளையாடிய நாள்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது அவரிடம் சச்சின், கோலி இடையே ரசிகர்கள் நடத்தும் ஒப்பீடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த பிரட் லீ "நாம் சச்சின் குவித்துள்ள ரன்களை வைத்து பார்த்தால், இப்போது கோலி தனது 8 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வேகத்தையொட்டி பார்த்தால். சச்சினின் ரன்களை அவர் முறியடிக்கும் வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த பிரட் லீ " ஆனால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதான விஷயமா என்ன ? நாம் இங்கு கடவுளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். கடவுளை காட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்களா ? அப்படி இருந்தால் அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என கூறியுள்ளார் அவர்.