மும்பை அணி ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனுக்கு, ஆஸ்திரேலிய நிர்வாகம் ஐபிஎல்லில் பந்துவீச தடை விதித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழா இப்போதே களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. அப்போது 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று முதலிடத்தில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்டவர்களில் இரண்டாவது வீரராகத் தேர்வானவர் கேமரூன் கிரீன்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பந்துவீச்சாளரான இவரை, மும்பை இந்தியன்ஸ் அணி 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இது, அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்பட்ட வேளையில், கேமரூனை ஏப்ரல் 13 வரை பந்துவீசக்கூடாது என ஆஸ்திரேலிய வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, கேமரூன் தற்போது ஓய்வில் இருக்கிறார். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தின்போது அவர் முழு உடல் தகுதியை எட்டுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் ஆஸ்திரேலியா இத்தகைய முடிவை அறிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் மார்ச் மாதம் பார்டர் கவாஸ்கர் டிராஃபி தொடர் நடைபெறவுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13ஆம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீசக்கூடாது என ஆஸ்திரேலிய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி மார்ச் மாதம் 13ஆம் தேதி பார்டர் கவாஸ்கர் டிராஃபி டெஸ்ட் தொடர் முடிவடையும்போது, அந்தத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் கிரீன், அதிலிருந்து நான்கு வாரங்கள் வரை பந்து வீசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வீரர்களின் பணிச்சுமையைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே இந்த முடிவை ஆஸ்திரேலியா வாரியம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து ஐபிஎல் அணிகளின் ஏலத்திற்கு முன்பே தகவல் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீரர்களின் பங்கேற்பு, விதிமுறைகள் அனைத்தையும் தெளிவாக கூறிய பின்னரே கேமரூன் கீரினை மும்பை அணி ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேம்ரூன் இல்லாவிட்டால், அவர் இடத்தை நிரப்புவதற்கான அடுத்த வீரரை வாங்கும் முயற்சியில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கி உள்ளது.