"ரொம்ப சோர்வா இருக்கு; மெதுவா பந்துவீசுறேன்"- புலம்பிய பும்ராவுக்கு பயிற்சியாளரின் பதில்!

"ரொம்ப சோர்வா இருக்கு; மெதுவா பந்துவீசுறேன்"- புலம்பிய பும்ராவுக்கு பயிற்சியாளரின் பதில்!
"ரொம்ப சோர்வா இருக்கு; மெதுவா பந்துவீசுறேன்"- புலம்பிய பும்ராவுக்கு பயிற்சியாளரின் பதில்!
Published on

'நான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சோர்வாக இருப்பதால் மெதுவாகவே பந்துவீசப் போகிறேன்' என்று பயிற்சியாளர் பரத் அருணிடம் கூறியிருக்கிறார் பும்ரா.

இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து விளையாடாமல் இருந்து வருகிறார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை,  டி20 உலகக்கோப்பை என மிகமுக்கியமான தொடர்களை தவறவிட்ட பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டியிலாவது விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்காமல் போனது.

இந்நிலையில் கடந்த 2014 - 2021ஆம் ஆண்டுவரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஆர்.ஸ்ரீதர் தான் எழுதியுள்ள 'Coaching Beyond' என்ற நூலில் பும்ரா குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சோர்வாக இருப்பதால் மெதுவாக பந்துவீச பும்ரா முடிவெடுத்தது குறித்து குறிப்பிட்டுள்ளார் அவர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் அப்போது பங்கேற்றது. இத்தொடரில் ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

இந்த தொடரில் மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. பொதுவாக சிட்னி மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளம்தான். அதிலும் அன்றையதினம் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்ததால், பதற்றமடைந்த பும்ரா பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் சென்று புலம்பியுள்ளார்.

பும்ரா பயிற்சியாளர் பரத் அருணிடம், “நான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். சிட்னி மைதானத்தில் வேகப்பந்து வீச்சில் விக்கெட் வீழ்த்துவது கடினமான ஒன்று. தொடரை வெல்வதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த ஆட்டம் நிச்சயம் டிராவில் முடிவடையும் என நினைக்கிறேன். அதனால் நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் சோர்வாக உணர்வதால் சற்று மெதுவாக பந்து வீசப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு பரத் அருண், “இந்தத் தொடருக்குப் பிறகு ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் இந்திய அணிக்கு புத்துணர்ச்சியுடன் வாருங்கள். இந்த டெஸ்ட் போட்டியிலும் மெதுவாகவே வீசுங்கள்; ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் பேட்ஸ்மேனுக்கு நீங்கள் சோர்வாக இருப்பது தெரியக்கூடாது.

பேட்ஸ்மேன் இந்த ஆட்டத்தில் உங்களை எளிதாக எதிர்கொண்டு விட்டால், அடுத்த முறை மோதும் போது மனதளவில் அவர் வலிமையை பெற்றுவிடுவார். பும்ராவை எதிர்கொண்டு விடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்து விடும். ஆகவே நீங்கள் எப்போதும் போல் வேகமாக பந்து வீசினால், உங்களை அடுத்த முறை சந்திக்கும் போதும் பும்ராவை எதிர்கொள்வது கடினம் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றும். என்னைக் கேட்டால் இரண்டாவது விஷயத்தை செய்தால் உங்களுக்கு நல்லது” என்றுள்ளார்.

பரத் அருணின் இந்த பேச்சு பும்ராவுக்கு ஊக்கத்தையும் தெளிவையும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அவர் கடைசி டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்ததற்கு, பரத்தின் இந்த பேச்சும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. போட்டி டிரா ஆனதும் வீரர்கள் அறையில் பரத் அருணுக்கு நன்றி தெரிவித்த பும்ரா, 'சரியான பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். இனி என் வாழ்நாளில் இந்த பாடத்தை நான் மறக்க மாட்டேன்' என்று கூறி தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தை தற்போது பயிற்சியாளர் ஸ்ரீதர் 'Coaching Beyond' நூலில் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com